கோரக்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் வெறிநாய் கடியால் உயிரிழந்த பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட சுமார் 450 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. துர்கா பூஜையின்போது பிரசாதத்தை பெற்று கொண்ட இரு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு, பசு உயிரிழந்ததையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நமது நாட்டில் நாய்க்கடி பிரச்சனை என்பது பெரிதாக மாறியுள்ளது.. நாய்கள் கடிப்பதால் ரேபிஸ் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. ரேபிஸ் தொற்று ஏற்படும் போது சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்புகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
கோரக்பூர் மாவட்டத்தின் தாதி காஸ் கிராமத்தை சேர்ந்த நவாமி யாதவ் என்பவருக்கு சொந்தமான பசு, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை அதன் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து நவாமி யாதவ் கால்நடை மருத்துவர்களான டாக்டர் பெச்சன் சிங், டாக்டர் ஹர்தேவ் யாதவ் மற்றும் தாதி காஸ் ஆகியோரிடம் இது குறித்து கேட்டிருக்கிறார்.. அப்போது, பசுவை நாய் கடித்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அந்த பசு நாய் குரைப்பதை போல சத்தமிட தொடங்கியதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதன் நிலைமை மோசமான நிலையில், மாலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பசுவுக்கு உண்மையிலேயே ரேபிஸ் பாதிப்பு இருந்ததா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பசுவின் உரிமையாளர் நவாமி யாதவ், அதை எப்போது தெருநாய் கடித்தது என்பது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். பசுவின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, அதன் நடவடிக்கைகளும் மாறியதால் கிராம மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஏனென்றால் துர்கா பூஜையின்போது அந்த பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட பிரசாதம் தான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பால் உள்ளூர் கடைகள் இரண்டுக்கும், பல வீடுகளுக்கும் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் மட்டுமின்றி, அந்த பாலை பயன்படுத்தியவர்களும் அச்சம் ஏற்பட்டது. பசுவின் விசித்திரமான நடவடிக்கைகள் மற்றும் அதன் உயிரிழப்பு குறித்த தகவல் பரவியதும் அச்சம் அதிகரித்தது. பலர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள தொடங்கினர். செவ்வாய்க்கிழமை சுமார் 50 பேர் அங்குள்ள சமூக சுகாதார மையத்தில் தடுப்பூசியை போட்டு கொண்டனர். மக்களிடையே இருக்கும் அச்சத்தை புரிந்து கொண்டு அக்டோபர் 21ம் தேதி புதன்கிழமை அரசு தரப்பில் சுகாதாரத்துறை குழுவினர் கிராமத்துக்கு சென்று தடுப்பூசி முகாமை நடத்தினர். அங்கிருந்த அனைத்து கிராம மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கிராமத்தில் இருந்த 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து கோரக்பூர் துணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜேஷ் குமார் கூறுகையில், "பசுவை நாய் கடித்து இருக்கும் என தெரிகிறது. இதனால் அதன் பாலில் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை துர்கா பூஜையின்போது சாப்பிட்ட பக்தர்கள் அச்சமடைந்தனர். பசு உயிரிழந்துவிட்டதால் மக்கள் அச்சம் மேலும் அதிகரித்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 450 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பாலை காய்ச்சி கொதிக்க வைத்த பிறகே, அதில் இருந்து பிரசாதம் தயாரிப்பார்கள். பொதுவாக பால் கொதிக்க வைக்கப்படும்போது அதில் வைரஸ் இருந்தாலும் அழிந்துவிடும். பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை. இருப்பினும், மக்களின் அச்சத்தை போக்கவே தடுப்பூசி போட்டுள்ளோம்" என்றார்.நாய்க்கடி சம்பவம்
அச்சம்
தடுப்பூசி
மருத்துவர்கள் விளக்கம்