ஜெயமோகன் பொங்கிட்டாரே.. பெரியார் நூலகத்தில் ஊழல் பண்ண அயோக்கியன் யார்? உடனே எரிக்கணும்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நூல்களை வெளியிட்ட அகல் பதிப்பகம் என்பது பொய் விலாசம் கொண்ட பொய் நிறுவனம். அந்த பதிப்பகம் மட்டும் 1800 தலைப்புகளில் நூல்களை அச்சிட்டு அளித்துள்ளது. அவற்றை எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் பொய்யான பெயர்கள். இவை எல்லா நடைமுறைகளையும் பயன்படுத்தி, பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எவனெல்லாம் துணைநின்றனர்? என்று கோவை பெரியார் நூலக விவகாரத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Periyar Library Scam

குறிப்பாக, நூல் கொள்முதலில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தரமற்ற மற்றும் போலியான நூல்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயமோகன் கண்டனம்

இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நூல் கொள்முதல் முறைகேடு குறித்து எழுத்தாளர் ஜெயமோகனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கோவை பெரியார் நூலகம் எப்படிப்பட்ட மோசடியை நிகழ்த்தியுள்ளது என்று பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை காட்டுகிறது. பல கோடி ரூபாய்க்கு நூல்களை வாங்கி அடுக்கியுள்ளனர். அத்தனையும் ஏ.ஐ வைத்து உருவாக்கப்பட்ட போலி நூல்கள். முழுக்க முழுக்க பிழையானவை. தகவல்களில் பிழை அல்ல. அத்தனைவரியும், அத்தனை செய்திகளும் பிழைகள். தமிழகத்தின் முதல்வராகக்கூட கற்பனை பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஏ.ஐ செயலிகள் உருவாக்கியவை இவை. (இன்று ஏ.ஐ.செயலி இந்த அளவுக்கு பொய்ச்செய்திகளைச் சொல்வதில்லை) ஏ. ஐ 'ஹலூசினேட்' செய்த தகவல்கள். முற்றிலும் பிழையான மொழி. நூல்கள் பலமடங்கு விலைக்கு வாங்கி அடுக்கப்பட்டுள்ளன.

ஏஐ - ஆபத்து

பொய்யான பெயர்கள் அத்தனை நூல்களையும் உடனடியாக எரிக்கவேண்டும். அள்ளி வெளியே போடுவதே ஆபத்து. ஏனென்றால் இவை பழைய நூல்களாக உலவினால்கூட அறிவுலகுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும். இவற்றிலுள்ள அபத்தங்கள் வெவ்வேறு கட்டுரைகளாக, ஆய்வுகளாக திரும்ப நிகழும். ஏ.ஐ அவற்றை மீண்டும் எடுத்து கொடுக்கையில் அவை அதிகாரபூர்வச் செய்திகளாக ஆகிவிட்டிருக்கும். அந்த பிழைகள் பெருகிக்கொண்டே இருப்பவை.

ஏ.ஐ அவற்றை பெருக்கும்போது மானுட அறிவு அதனுடன் போரிட முடியாது. பிழைகளை நீக்கவே முடியாது. அந்த நூல்களை வெளியிட்ட அகல் பதிப்பகம் என்பது பொய் விலாசம் கொண்ட பொய் நிறுவனம். அந்த பதிப்பகம் மட்டும் 1800 தலைப்புகளில் நூல்களை அச்சிட்டு அளித்துள்ளது. அவற்றை எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் பொய்யான பெயர்கள்.

அயோக்கியன் எவன்?

இவை எல்லா நடைமுறைகளையும் பயன்படுத்தி, பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எவனெல்லாம் துணைநின்றனர்?

இவர்களை கண்டுபிடித்து தண்டிப்பது நியாயமான கோரிக்கை. ஆனால் தமிழகத்தில் அதெல்லாம் நிகழவே வாய்ப்பில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இவற்றை நியாயப்படுத்தி கட்டுரைகளை எழுத ஆரம்பித்து விடுவார்கள் கூலி அறிவுஜீவிகள். உண்மையில் இந்நூல்கள் இதேபோல அண்ணா நூலகம் போன்ற பிற நூலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் வாங்கி அடுக்கப்பட்டுள்ளனவா? அவற்றை எல்லாம் நீக்க என்னவழி? எண்ணிப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

அழிவுச் செயல்பாட்டின் முகம்

சென்ற நூறாண்டுகளில் தமிழ் அறிவுலகம் மீது விடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதல் இந்த ஊழல். அதிலும் ஒரு சில கோடிகளுக்காகச் செய்யப்பட்ட பெரும் சூறையாடல். இதைச் செய்தவன்களுக்கெல்லாம் படிக்கும் பிள்ளைகள் இருக்க மாட்டார்களா?

தமிழர் பெருமை, தமிழ்ப்பெருமை என்றெல்லாம் நாளெல்லாம் எவரோ செவிமூட கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்ந்துள்ளது. எந்த விளைவு ஏற்படும்? எவருக்கும் எந்த கூச்சமும் இருக்காது. எவரும் பொருட்படுத்தப்போவதில்லை. அப்படியே கடந்து செல்வார்கள். ஏனென்றால் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய அழிவு செயல்பாட்டின் ஒரு முகம்தான் இது' என்று ஜெயமோகன் கூறியுள்ளார்.

கோவை பெரியார் நூலகம்

இன்னொரு பதிவில், "கோவை பெரியார் நூலகத்தில் போலிநூல்கள் அச்சிடப்பட்டு குவிக்கப்பட்டிருப்பதை பெருமாள் முருகன் வெளிப்படுத்தியதை குறிப்பிட்டு அமைச்சர் ராஜ் மோகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். சில பதிப்பகங்களுக்கு மட்டும் நூலக ஆணை அளிக்கப்படுவது தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஊழல். இதை பலமுறை குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட வெவ்வேறு நூல்களில் இருந்து பிய்த்து புதிய புதிய நூல்களை போலியாக அச்சிட்டு அவற்றை நூலகங்களுக்கு அளித்துவிடுவார்கள். எந்தப் பயனுமற்ற காகிதக்குப்பைகள் அவை. மிக கீழ்த்தர காகிதத்தில் அச்சிடப்படுபவை. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது கொடூரமான வன்முறை. அறிவியக்கம் மீதான காறி உமிழ்தல். இது குறைந்தது ஓராண்டாக நிகழ்ந்துவந்த ஊழல் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பரிந்துரை பெற்று, இப்படி 1800 நூல்களை உருவாக்கி, அச்சிட்டு அவற்றை கொள்முதல் செய்து அடுக்க அத்தனை காலம் தேவைப்படும்.

ஆனால், அமைச்சர் இதை அரசியலுக்குக் கருவியாக ஆக்காமல் சம்பந்தப்பட்டவர்களை வெளிப்படுத்தி, சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அதைச் செய்யாமல் விசாரிக்கிறோம் என மழுப்பி அடுத்த விஷயங்களுக்கு செல்வதே இங்கே வழக்கம். அதை இவரும் செய்வார் என்றால் அவரும் இந்த அழிவுக்கு உடந்தை என்றே பொருள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+