டாஸ்மாக் பாரை அகற்ற போராடியவரை சிக்க வைக்க கடையில் கஞ்சா வைத்த 2 பேர்! ரெய்டு போன போலீசை பதறவைத்த சிசிடிவி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் ராஜ்குமார் என்பவரை சிக்க வைக்க அவரது மளிகை கடையின் அருகே கஞ்சா பொட்டலத்தை 2 பேர் வைத்து சென்றனர். அதன்பிறகு சில நிமிடங்களில் மதுவிலக்கு அமலாக்க போலீசார் என 2 பேர் 'மஃப்டியில்' வந்து ரெய்டு நடத்தி பொட்டலத்தை கைப்பற்றினர். ஆனால் அனைத்து நிகழ்வுகளும் சிசிடிவி கேமராவில் பதிவானதாக கூறியதால் பதறிய போலீசார் மழுப்பிவிட்டு சென்ற சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் மதுபான பார் உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அகற்ற வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

TASMAC bar In Sivaganga

கிராம மக்களை ஒன்றிணைத்து ராஜ்குமார் என்ற சமூக ஆர்வலர் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் பாரை 10 நாட்களில் அகற்றுவதாக அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர்.

ஆனால் அடுத்த நாளே ராஜ்குமாரை போலீசில் சிக்க வைக்க பெரிய சதி நடந்துள்ளது. இதுபற்றி ராஜ்குமார் கூறியதாவது: ''நான் மதுபான கடைக்கு எதிராக மக்கள் மற்றும் கட்சிக்காரர்களை திரட்டி அந்த கடையை அகற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். போராட்டத்திற்கு நான் முன்னிலை வகித்து வருகிறேன். கடைசியாக சாலைமறியல் செய்தோம். 10 நாட்களில் மதுபான கடையை மூடுவோம் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். இது நடந்த மறுநாள் காலையில் என்னுடைய கடைக்கு 2 பேர் வந்தனர். கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வந்தார்கள்.

ஒருவர் கடைக்குள் யார் இருக்கிறார்? என்று உற்றுநோக்கிவிட்டு, இன்னொரு நபர் கடைக்கு வெளியே கால்வாயில் ஒரு பொட்டலம் வைத்துவிட்டு சென்றார். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு கார் வருகிறது. அந்த காரில் 2 பேர் இறங்குகின்றனர். போலீஸ் அதிகாரி என்று சொல்லி என்னுடைய கடையை சோதனை செய்தனர். பிறகு பொட்டலம் இருந்த இடத்திற்கு சென்றனர். பொட்டலத்தை எடுத்தனர்.

நீங்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்கிறீர்களா? என கேட்டனர். நான் இல்லை என்று சொன்னேன். ஆனால் அவர்கள் உங்களின் கடையில் இருந்து இந்த பொட்டலத்தை எடுத்துள்ளோம் என்றார். அதற்கு நான் எனக்கும், இந்த பொட்டலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றேன். ஆனால் அவர்கள் சம்பந்தம் இருப்பதாக கூறினார்கள். சரி சார் என்னுடைய கடையில் கேமரா உள்ளது. அதில் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னேன்.

இதை சொன்னதுமே அவர்கள் அந்த பொட்டலத்தை காரில் எடுத்து வைத்துவிட்டு இதை பெரிதுப்படுத்த வேண்டாம். நீங்கள் மதுபான கடைக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் யாரோ காழ்ப்புணர்ச்சியில் இதை செய்துள்ளனர். நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

எதுவாக இருந்தாலும் எங்களுக்கு போன் செய்யுங்கள். நாங்கள் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இருந்து வந்துள்ளோம் என்று விக்னேஷ் என்பவர் போன் நம்பர் கொடுத்துவிட்டு சென்றார். அதன்பிறகு சிசிடிவி கேமரா பார்த்தபோது யார் வந்தார்கள், பொட்டலம் வைத்தார்கள் என்பது தெரியவந்தது.

இதனை ஆதாரமாக கொடுத்துள்ளோம். நான் மதுபான கடையை அகற்ற போராடியதால் அந்த மதுபான கடையின் உரிமையாளர் இப்படி செய்துள்ளனர். போலீஸ் உடந்தையுடன் செய்துள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.

அதுமட்டுமின்றி ராஜ்குமார் கடைில் பொட்டலம் வைத்த சிசிடிவி கேமரா பதிவு வீடியோவாக வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ராஜ்குமாரின் கடைக்கு 2 பேர் பைக்கில் வருகின்றனர். அவர்கள் கடை அருகே ஒரு பொட்டலத்தை வைத்து செல்கின்றனர். பிறகு சில நிமிடங்களில் மஃப்டியில் 2 போலீசார் காரில் வந்துரெய்டு நடத்துவதுபோல் பொட்டலத்தை எடுத்து செல்வதோடு, விசாரணைக்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். ஆனால் சிசிடிவி கேமரா உள்ளது என்று சொன்னதுமே போலீசார் உங்களை போலீசில் சிக்கி வைக்க யாரோ காழ்ப்புணர்ச்சியில் இப்படி செய்துள்ளனர் என்று கூறி நழுவி செல்வது பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+