கேஆர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கை ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. தவெக MLA பதில் அளிக்க உத்தரவு!
டெல்லி: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் ஒரு வாக்கில் தோல்வியடைந்தார். தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் மேல்முறையீடு செய்தார். மேலும், எம்எல்ஏ சேதுபதி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், 83,374 வாக்குகளை பெற்றிருந்தார்.
இதனையடுத்து சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் பெரியகருப்பன். திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக, கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, எதிர் தரப்பான தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், முக்கிய இடைக்கால உத்தரவாக, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் தொடர்பான அனைத்து வகை ஆவணங்களையும் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
