8 மாத சம்பளப் பாக்கி.. அரசு அதிகாரி கையில் பிச்சை பாத்திரம்.. ஆபீஸ் வாசலில் கதறவிட்ட பெண்
சென்னை: அரசு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிக்கே 8 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்? பீகாரில் பெண் அரசு அதிகாரி ஒருவருக்கு இப்படித்தான் சம்பளம் வராமல் போயிருக்கிறது.. பொறுத்து பொறுத்து பார்த்த அந்த பெண் அதிகாரி, சம்பளத்தைப் பெறுவதற்காக என்ன செய்தார் தெரியுமா? இது தொடர்பான வீடியோதான் சோஷியல் மீடியாவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபூர் வட்டார அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் அல்பிதா சிங்... இவர் அந்த பொறுப்பில் சேர்ந்து 11 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவருக்கு 3 மாதங்களுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மீதமுள்ள 8 மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையாம்.. தொடர்ந்து பணியாற்றி வந்தும் மாதந்தோறும் கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்காததால் அல்பிதா சிங் அதிருப்தியில் இருந்துள்ளார்.
பிச்சைப் பாத்திரம்
தனது சம்பள பிரச்சினையை பலமுறை அதிகாரிகளிடம் கொண்டு சென்றுள்ளார்.. ஆனால், அதற்கான பலன் கிடைக்கவில்லை.. இதன் காரணமாக, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அல்பிதா சிங் வித்தியாசமான போராட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி, பிரம்மபூர் வட்டார அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தை நடத்தினார்.. அதிலும், கையில் பிச்சை பாத்திரத்துடன் உட்கார்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து 2 நாட்கள் நடத்தியுள்ளார். அரசு அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரே தனது சம்பளத்திற்காக பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
எதற்காக அல்பிதா சிங்குக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார்கள் தெரியவில்லை.. ஏற்கனவே அல்பிதா சிங்குக்கும் பிரம்மபூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் இடையே நிர்வாக ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது சம்பளம் நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருந்தாலும் சம்பளம் நிறுத்தப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
இந்த விவகாரம் பக்ஸர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அல்பிதா சிங்கின் சம்பளத்தை எந்த அடிப்படையில் நிறுத்தி வைத்தீர்கள் என்று கேட்டு பிரம்மபூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடும் கண்டனம் தெரிவித்த கோர்ட்
மேலும், உரிய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல் அரசு ஊழியர்களின் சம்பளத்தை தன்னிச்சையாக நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாதங்களாக நிலுவையில் உள்ள தனது சம்பளத்திற்காகப் பெண் அதிகாரி நடத்திய இந்தப் போராட்டம் இப்போது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, அவருக்கான சம்பளம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...!!!




Click it and Unblock the Notifications
