அண்ணானு சொல்வாங்களே.. எப்படி 12 பேரையும் பணி நீக்கம் செய்வேன்.. சென்னை ஐடி மேனேஜருக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''2016ல் இருந்து 10 ஆண்டுகளாக நான் இந்த 12 பேருடன் ஒன்றாக பணியாற்றி வருகிறேன். உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டு இருக்கிறோம். திருமணம், தனிப்பட்ட சாதனைகளின்போது ஒன்றாக கூடி கொண்டாடி இருக்கிறோம். அவர்கள் எப்போதும் என்னை அண்ணா என்று அழைப்பார்கள். இப்போது 12 பேரையும் பணி நீக்கம் செய்ய சொல்கிறார்கள். இதனை எப்படி எதிர்கொள்ள போகிறேன்!'' என்று சென்னை சாப்ட்வேர் நிறுவனத்தின் மேனேஜர் ஒருவர் புலம்பி உள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

they-call-me-anna-how-will-i-asked-to-fire-12-employees-chennai-it-manager-breaks-down
Photo Credit:

தற்போது ஐடி நிறுவனங்களின் தங்களின் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து வருகின்றனர். ஏஐ வருகை, செலவை குறைத்தல் என்பது உள்பட பல காரணங்களை கூறி இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்த திடீர் பணி நீக்கத்தின்போது சில மாத சம்பளங்களை அந்த நிறுவனங்கள் வழங்கினாலும் கூட ஊழியர்களுக்கு இன்னொரு வேலை கிடைப்பதில் சவால் நிலவி வருகிறது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். எப்போது தங்களின் வேலை காலியாகுமோ? என்ற அச்சத்தில் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர் தனது 'ரெடிட்' வலைதளத்தில் பகிர்ந்த தகவல் ஒன்று அனைவரையும் கலங்க வைத்துள்ளது. தனக்கு கீழ் பணியாற்றும் 12 பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் கூறியுள்ள நிலையில் அதனை எப்படி செய்வது? என்று கலங்கியபடி போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''என்னுடைய சீனியர்கள் என்னை அழைத்து கதவுகளை மூடி மீட்டிங் ஒன்றை நடத்தி 'எக்ஸல் ஷீட்' ஒன்றை தந்தனர். அதில் 12 பேரின் பெயர்கள் இருந்தது. அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர். ஒவ்வொரு ஊழியர்களையும் தனியாக அழைத்து 15 நிமிடங்கள் பேசி பணி நீக்கம் செய்ய வேண்டுமாம்.

பணி நீக்கம் செய்யப்படும் 12 பேரும் என்னை பொறுத்தவரை சாதாரண ஊழியர்கள் இல்லை. நானும், அவர்களும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறோம். மொத்தமாக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். பல கடினமான சமயங்களில் இரவு முழுவதும் கண்விழித்து புராடக்‌ஷன் பிரச்சனைகளை ஒன்றாக பணியாற்றி முடித்துள்ளோம். உணவுகள் பகிர்ந்துள்ளதோடு, திருமணங்கள் மற்றும் தனிப்பட்ட சாதனைகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளோம். ஊழியர்கள் என்பதை தாண்டி குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.

இவர்கள் அனைவரும் என்னை அன்போடு அண்ணா என்று தான் அழைப்பார்கள். அவர்களின் குடும்ப சூழல் எனக்கு நன்றாக தெரியும். சிலருக்கு நிதி மற்றும் குடும்பம் சார்ந்து பொறுப்புகள் உள்ளன. டெவலப்பராக இருக்கும் ஒருவர் சமீபத்தில் தான் 'ஹோம் லோன்' வாங்கியிருந்தார். இன்னொருவரின் தாய் கேன்சரால் உயிருக்கு போராடி வருகிறார். இன்னொருவரின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது.

இப்படி இருக்கும்போது அவர்களை அழைத்து எப்படி இனி உங்களுக்கு வேலையில்லை. வேலையில் இருந்து நீக்குகிறோம் என்று கூறுவேன். நிறுவனத்தில் சீனியர்களாக இருப்பவர்கள் செலவை குறைக்கிறோம் என்று இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்து அதனை ஊழியர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என எங்களை போன்ற மேனேஜர்களுக்கு உத்தரவிடுகின்றனர்.

உயர் அதிகாரிகளுக்கு, ஊழியர்களின் கண்ணீரோ, அவர்களின் குடும்ப சூழலோ தெரிவதில்லை. அவர்களுக்கு வேலை சரியாக முடிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. இதனால் 12 பேரை பணி நீக்கம் செய்வதை விட நானே ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாமா என்று தோன்றுகிறது.

ஆனால் நான் வேலையை விட்டு சென்றாலும் இந்த நிலைமை மாறப்போவது இல்லை. என்னுடைய இடத்திற்கு இன்னொருவர் வந்து பணி நீக்கம் செய்வார். இதனால் பணிநீக்க பட்டியலில் இருக்கும் ஊழியர்களை நான் எப்படி எதிர்கொள்ள போகிறேனோ?.

ஏனென்றால் நாளை காலையிலேயோ அவர்கள் பணிக்கு வந்து சிரித்தபடி 'குட்மார்னிங்' அண்ணா என்று கூறுவார்கள். என்னுடைய குடும்பத்தினரை பற்றி நலம் விசாரிப்பார்கள்'' என மனவேதனையை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பலரையும் கலங்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+