பலியான 9 காசிமேடு மீனவர்கள்.. கேள்வி எழுப்பிய மக்கள்.. தலைகுனிந்து சிலை போல நின்ற அமைச்சர் ஸ்ரீநாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து 'முரசு' புயலின் போது கடலுக்குள் சென்று மாயமான 9 மீனவர்களில், நான்கு பேரின் உடல்கள் ஆந்திர மாநிலக் கடற்கரையில் சடலங்களாகக் கரை ஒதுங்கிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தங்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை உயிருடன் காப்பாற்ற அரசு நிர்வாகம் துளியும் முயற்சிக்கவில்லை என்று கூறி, காசிமேடு மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்தச் சூழலில், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kasimedu Fishermen Tragedy

9 உயிர்கள் போனதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்

அந்த வீடியோவில், அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் அதிகாரிங்களை பார்த்து.. பொதுமக்களில் ஒருவரான இளைஞர் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார்.. "மீட்புப் பணிக்காகக் கடலோரக் காவல் படையோ, ஹெலிகாப்டரோ ஸ்பாட்டுக்கு வரவே இல்லை. யாருமே போகாமல், போனோம் போனோம்னு பொய் சொல்றீங்க. மீன்வளத்துறை ஏடி அலுவலகத்தின் அலட்சியத்தால்தான் இந்த ஒன்பது உயிர்களும் போயிருக்கு. நாளைக்கு பார்க்கலாம், நாளைக்கு பார்க்கலாம் என்று இழுத்தடித்தார்களே தவிர, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது இன்னும் ஏன் எந்த நடவடிக்கையோ அல்லது சஸ்பெண்டோ செய்யவில்லை? என்று அடுக்கடுக்காகப் பொங்கி எழுகிறார்.

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் துறை அதிகாரி கைகளை கட்டிக்கொண்டு மௌனமாக நிற்கிறார். எளிய மக்களின் நியாயமான இந்தக் கூக்குரலுக்கு அதிகாரிகளிடம் எந்தப் பதிலும் இல்லை என்பது அந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.

அமைச்சரா அல்லது வழிப்போக்கரா? - மௌனம் காக்கும் ஸ்ரீநாத்

இந்த வீடியோவில் அதிகாரியை விட பொதுமக்களை அதிகம் கொதிக்க வைத்திருப்பது, அதிகாரிக்கு மிக அருகில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் நபரின் நிலைதான். அவர்தான் அந்தத் துறையின் அமைச்சர் ஸ்ரீநாத்.

பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் உறவுகளையும் இழந்து, அரசு அதிகாரியைப் பார்த்துக் கதறி அழும்போது, ஒரு துறையின் அமைச்சர் அதைத் தட்டிக்கேட்டு உடனடியாகத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் ஏதோ தொடர்பே இல்லாமல் கடைக்குத் தண்ணிக்கேன் போட வந்தவர் போல, தலையை குனிந்தபடி எந்தப் பதிலும் பேசாமல் அமைச்சர் ஸ்ரீநாத் நின்று கொண்டிருக்கிறார்.

பதவி ஏற்றதில் இருந்தே களத்திற்கு வராமல், துறை சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருந்த அமைச்சர், இவ்வளவு பெரிய விபத்து நடந்த பிறகும் கூட ஒரு வார்த்தை பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பது மீனவ மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மீனவர்கள் சொன்ன பிறகே விழித்த துறை

காசிமேடு மீனவர்கள் கடலில் தத்தளித்த போது, அவர்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டரையோ, ரோந்து கப்பல்களையோ உரிய நேரத்தில் அனுப்பத் தவறியதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடைசியில் ஆந்திர மாநில மீனவர்கள் தகவல் தெரிவித்து, உடல்கள் கரை ஒதுங்கிய பின்னரே தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் விழித்துக் கொண்டுள்ளனர்.

அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியிருந்தால், அந்த 9 உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியும் என்பதே காசிமேடு மக்களின் ஒட்டுமொத்தக் குமுறலாக உள்ளது.

நடவடிக்கை எப்போது?

"எங்கள் வீட்டுப் பிள்ளைகளின் உயிர் போனதற்குத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம். அவர்களைக் காப்பாற்றத் தவறிய அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மக்களுக்குப் பதில் சொல்லத் துப்பில்லாத அமைச்சரும் அதிகாரிகளும் எதற்கு?" என்று மீனவ அமைப்புகள் ஆவேசமாக முழங்கி வருகின்றன.

பொதுமக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நடுங்கி நிற்கும் அதிகாரிகளும், தங்களுக்குத் தொடர்பே இல்லை என்பது போல் விலகி நிற்கும் அமைச்சர் ஸ்ரீநாத்தின் போக்கும், தமிழக மீன்வளத்துறை நிர்வாகம் எவ்வளவு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+