உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் காரணமாக, சர்வதேச அளவில் எரிசக்தி விநியோக கட்டமைப்பு மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு பெரிய போரை தொடங்கி வைத்த அமெரிக்கா, தற்போது இந்த போரால் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன.

என்னென்ன பாதிப்புகள்?
இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்துக்கொண்டு ஈரானை தாக்க, பதிலுக்கு ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சொத்துக்கள் எனில், அமெரிக்காவுக்கு சொந்தமான அல்லது அமெரிக்காவுக்கு எரிபொருளை விநியோகிக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்தான். இதன் மீதான தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அதேபோல, எரிவாயு விலையும் அதிகரித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $119 வரை உயர்ந்து, இப்போது $114க்கு குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரே நாளில் 6% உயர்வாகும். ஐரோப்பாவில் எரிவாயு விலை 28% உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி மாத விலையை விட இரண்டு மடங்கு அதிகம். இது சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, பொருளாதார வளர்ச்சி குறைந்து, அதே சமயம் விலைவாசி உயரும் 'ஸ்டாக்ப்ளேஷன்' அபாயம் உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
ஈரான் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தியது?
ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எனப்படும் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. 'தெற்கு பார்ஸ்' என்பது, ஈரானுக்கு மட்டும் முக்கியம் கிடையாது, மொத்த உலகத்துக்கும் ரொம்ப முக்கியம். இங்கு மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருக்கிறது. இதை வைத்து சுமார் 13 ஆண்டுகளுக்கு மொத்த உலகத்துக்கும் எரிபொருள் சப்ளை செய்துவிட முடியும். எனவே ஈரான் ஆக்ரோஷமாக பதில் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
பதில் தாக்குதலில் வளைகுடா முழுவதும் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
- கத்தார் (Ras Laffan): உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையான ராஸ் லஃப்பானில் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
- சவுதி அரேபியா (Yanbu): அராம்கோ-எக்ஸான் (Aramco-Exxon) சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கியத் துறைமுகமான யான்புவில் (Yanbu) ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
- குவைத்: மினா அல்-அஹ்மதி மற்றும் மினா அப்துல்லா ஆகிய இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- யுஏஇ (UAE): ஹப்ஷன் (Habshan) எரிவாயு வளாகம் மற்றும் பாப் (Bab) எண்ணெய் வயல் மீது ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததால், எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பாதிப்பு என்ன?
கத்தாரின் ராஸ் லஃப்பான் ஆலை ஆண்டுக்கு 77 மில்லியன் மெட்ரிக் டன் எல்என்ஜியை உற்பத்தி செய்கிறது. இங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிவாயு செல்கிறது. இந்தத் தாக்குதலால் உலகளவில் நீண்டகால எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சேதங்களைச் சரிசெய்ய மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.
கத்தார் மீதான தாக்குதலால் மொத்த உலகமும் கதிகலங்கி போய் இருக்கிறது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், அல்லது ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம் இஸ்ரேலும் தன்னை கேட்காமல் தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications