டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க!
பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை மோசமாக முடிந்த காரணத்தால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் சப்ளை மொத்தமாக முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஹார்முஸ் நீரிணை தடை அறிவிப்பை கிண்டல் செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முகமது பாகர் காலிபாப்-வின் கிண்டல் பதிவு அமெரிக்க மக்களை கோப்படுத்தியுள்ளது.

காலிபாப் பதிவு
ஈரான் - அமெரிக்க மத்தியிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அமெரிக்க கடற்படை ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களைத் தடை செய்யும் என்று டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, காலிபாப் அமெரிக்காவில் தற்போது நிலவும் எரிவாயு விலை நிலவரத்தை படத்தைப் பகிர்ந்து "தற்போதைய விலையை கண்டு என்ஜாய் செய்துக்கொள்ளுங்கள். விரைவில் $4-$5 விலையை நினைத்து ஏங்குவீர்கள்" என்று எழுதினார். இந்தப் பதிவு உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
காலிபாபின் எச்சரிக்கை
காலிபாப் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட படத்தில் வெள்ளை மாளிகை அருகே உள்ள எரிவாயு நிலைய விலை காட்டப்பட்டுள்ளது. அதனுடன் "ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)" என்ற பார்முலாவையும் அவர் இணைத்துள்ளார்.
இந்த பார்முலாவை ஒரு எக்ஸ் பயனர் இதை எளிய வார்த்தைகளில் விளக்கினார்: "கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்தால் விலை உயரும். முதல் அதிர்ச்சி விலையை உயர்த்தும். அதன் எதிர்வினை மீண்டும் விலையை உயர்த்தும். தற்போதைய மலிவான எரிவாயு விலையை ரசித்துக் கொள்ளுங்கள்." இந்தப் பதிவு அமெரிக்க மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிவாயு விலை உயர்வை நினைவூட்டும் வகையில் காலிபாப் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

விளக்கம்
தற்போது அமெரிக்காவில் எரிபொருள் விலை ஒரு கேலனுக்கு 4-5 டாலர் வரையில் உள்ளது, அமெரிக்க கடற்படை ஹார்முஸ் வழித்தடத்தை முடக்க திட்டமிட்டு உள்ள வேளையில் இனி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரும். இதற்கு அமெரிக்க மக்களும், அமெரிக்க பொருளாதாரமும் தயாராக இருக்க வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை தடை அறிவிப்பு
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து டிரம்ப், அமெரிக்கக் கடற்படை ஹார்முஸ் நீரிணையில் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களைத் தடை செய்யும் என்று அறிவித்தார். இது உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மத்திய தளபதி (CENTCOM) பின்னர் வெளியிட்ட அறிக்கையில், இந்த தடை ஈரானுக்கு செல்லும் அல்லது ஈரானில் இருந்து வரும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் தெளிவுபடுத்தியது. இந்தத் தடை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடியது. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் 119 டாலரைத் தொட்டது. பின்னர் இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் விலை 92 டாலருக்குக் கீழ் வந்தது. தற்போது பேச்சுவார்த்தை தோல்வியால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் 22 வரை உடன்பாடு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் சில கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications