அழகியை பார்த்தவுடன் அமெரிக்க அணு ஆயுத சீக்ரெட்களை உளறிய அதிகாரி.. ஹனி டிராப்பில் வசமாக சிக்கினார்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்புப் படையான பென்டகனில் பணிபுரியும் அதிகாரி ஒருவரே அந்நாட்டின் முக்கியமான ராணுவ தகவல்களை உளறிக் கொட்டி இருக்கிறார். ஹனி டிராப்பில் சிக்கிய அவர், உணவகம் ஒன்றில் அழகிய பெண்ணிடம் எல்லா தகவல்களையும் உளறிக் கொட்டி இருக்கிறார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகின் மிகவும் வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகெங்கும் தனது படைகளை நிறுத்தியுள்ள அமெரிக்கா, தனது பாதுகாப்புப் படைக்கு ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர்களை செலவிடுகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் அதிமுக்கியமான உளவு தகவல்களை அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே உளறிக் கொட்டியுள்ளார்.

சிக்கிய அதிகாரி
அமெரிக்க ராணுவத்தின் அணுசக்தி மற்றும் ரசாயனப் பாதுகாப்புப் பிரிவில் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆண்ட்ரூ ஹக் என்பவர் தான் இதில் மாட்டியிருக்கிறார். இந்த ஆண்ட்ரூ ஹக், அமெரிக்காவின் மிக ரகசியமான பாதுகாப்புத் தகவல்களை முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ வெளியாகி அமெரிக்காவையே அதிரவைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
கன்சர்வேடிவ் ஆர்வலரான ஜேம்ஸ் ஓகீஃப் இந்த ரகசிய ஆப்ரேஷனை நடத்தியுள்ளார். அதில் ஒரு பெண் பத்திரிகையாளர் தான் செய்தியாளர் என்பதை மறைத்துக் கொண்டு ஹாக்கிடம் பேசியுள்ளார். அழகிய பெண் தன்னிடம் வந்து பேசியதால் ஆண்ட்ரூ ஹக் எல்லாவற்றையும் உளறி கொட்டியுள்ளார். இருவரும் உணவகத்தில் சந்தித்துப் பேசிய நிலையில், அப்போது மது அருந்திக் கொண்டே, தற்காப்பு விதிகளை மீறி ஆண்ட்ரூ பல திடுக்கிடும் ரகசியங்களை உளறியுள்ளார்.
சொன்ன தகவல்கள் என்ன
ஈரான் - அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி அமெரிக்காவின் இலக்கில் இருப்பதாகவும், அவர் தனது போக்கை மாற்றாவிட்டால் கொல்லப்படுவார் என்றும் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், அதைப் போரில் தவிர்க்க முடியாத சேதம் என்று சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளார்.
மேரிலாந்தில் உள்ள அமெரிக்க ஆய்வகத்தில் கொடிய நரம்பு மண்டல பாதிப்பை ஏற்படுத்தும் 'சரின்' (Sarin) போன்ற ரசாயனங்கள் இப்போதும் இருப்பதாகவும், சமீபத்தில் ஒரு பெண் ஆய்வாளர் அங்கு உரியப் பாதுகாப்பு உடைகளை அணியாததால் அந்த ரசாயனம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், விண்வெளியில் உள்ள சாட்டிலைட்கள் மற்றும் ரேடார் மூலம் எதிரி நாடுகளின் ஏவுகணை ஏவுதலை எப்படிக் கண்காணிக்கிறோம் என்பதையும், அணு ஆயுதங்களை ஏவுவதற்கான ரகசிய மெசேஜ்களை ஊழியர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
பணியிடை நீக்கம்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது பென்டகனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான சில மணி நேரங்களிலேயே, ஆண்ட்ரூ ஹக் பென்டகன் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் சிந்தியா ஸ்மித் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், ஹக் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது அதன் ரகசியங்களை எவ்வளவு கவனமாகப் பாதுகாக்கிறது என்பதில் தான் இருக்கிறது. அணு ஆயுதங்களைக் கையாளுபவர்கள் 'பைத்தியக்காரர்களாக' இருக்கக் கூடாது என்று அந்த வீடியோவிலேயே ஹக் கூறுகிறார். ஆனால், அவரே முன்பின் தெரியாத பெண்ணிடம் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ரகசியங்களை அவரே உளறியிருப்பது தான் மிகப் பெரிய முரண்பாடு.












Click it and Unblock the Notifications