ஒரு நாடும் தப்பாது போல.. உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள்.. லிஸ்ட் போட்டு எச்சரித்த WEF!
லண்டன்: இந்த உலகம் வரும் காலத்தில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த லிஸ்ட்டை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. அதில் உலக நாடுகளிடையே பொருளாதார மோதல்கள் மற்றும் போர்கள் ஆகியவையே மிகப் பெரிய ஆபத்தாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு, வானிலை நிகழ்வுகளும் முக்கிய சிக்கலாக மாறியுள்ளன.
உலகப் பொருளாதார மன்றம் அவ்வப்போது தொடர்ச்சியாகப் பேரிடர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த அறிக்கையை வெளியிடும். அதன்படி சமீபத்தில் நடப்பு 2026ம் ஆண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகள் (2028) மற்றும் அடுத்த பத்து ஆண்டுகளில் (2036) உலகையே மாற்றி அமைக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல்கள் குறித்து உலக பொருளாதார மன்றம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நம்பிக்கையற்ற சூழல்
குறுகிய மற்றும் நீண்ட கால விஷன்களை பொறுத்தவரை அது நம்பிக்கையற்றதாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. குளோபல் ரிஸ்க் அதிகம் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், "அடுத்த இரண்டு ஆண்டுகளில் புயல் உள்ளிட்ட கொந்தளிப்பான காலநிலையை 50% பேர் எதிர்பார்க்கின்றனர்.. இது அடுத்த 10 ஆண்டுகளில் 57%ஆக உயர்கிறது. மேலும், அடுத்த இரண்டு மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 40% மற்றும் 32% பேர் சர்வதேச சூழல் நிச்சயமற்றதாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.. ஒரு சதவீதம் பேர் மட்டுமே அமைதியான சூழல் நிலவும் என எதிர்பார்க்கின்றனர்.
உலக ஜிடிபி, மக்கள் தொகை அல்லது இயற்கை வளங்களின் குறிப்பிடத்தக்க விகிதத்தில் மோசான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு அல்லது நிலையைத் தான் குளோபல் ரிஸ்க் என்கிறார்கள். உடனடியாக ஏற்படும் பாதிப்பு, குறுகிய கால பாதிப்பு (இரண்டு ஆண்டுகள்) மற்றும் நீண்ட காலம் பாதிப்பு(10 ஆண்டுகள்) என இதை மூன்று வழிகளில் வகைப்படுத்தியுள்ளனர்.
ஆபத்துகள்
அதில் புவிசார் பொருளாதார மோதல்கள் தான் அதிக ஆபத்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆபத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே போட்டி தீவிரமடையும்போது, ஆயுத மோதல் உடனடி அச்சுறுத்தலாக மாறுகிறது. இருப்பினும், உடனடி அச்சுறுத்தலில் மட்டுமே ரிஸ்க் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்புகளில் அவை முக்கிய இடத்தில் இல்லை
அதிகரிக்கும் உலக நாடுகளின் கடன்கள் மற்றும் நிலையற்ற பங்குச்சந்தை எனப் பொருளாதாரச் சிக்கல்கள் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இதுபோன்ற பொருளாதார மந்தநிலைகள் உடனடி பாதிப்புகளில் 6வது இடத்தில் இருக்கிறது. குறுகிய கால ஆபத்து லிஸ்டில் 11ஆவது இடத்திலும், கால ஆபத்து லிஸ்டில் 19ஆவது இடத்திலும் உள்ளன.
உடனடி ஆபத்து 2026
- உலக நாடுகளின் பொருளாதார மோதல்
- உலக நாடுகளுக்கு இடையேயான ஆயுத மோதல்
- தீவிர வானிலை நிகழ்வுகள்
- சமூகப் பிளவு
- பொய்த் தகவல்
இந்த 5 தான் டாப் பிரச்சினைகளாக உள்ளன. இது தவிரப் பொருளாதார மந்தநிலை, மனித உரிமைகள் பறிப்பு, AI விளைவுகள், இணையப் பாதுகாப்பின்மை, மற்றும் சமத்துவமின்மை ஆகியவையும் அடுத்தடுத்து உள்ளன.
குறுகிய கால பாதிப்பு
- உலக நாடுகளிடையே பொருளாதார மோதல்கள்
- பொய்த் தகவல்
- சமூகப் பிளவு
- தீவிர வானிலை நிகழ்வுகள்
- உலக நாடுகளிடையே ஆயுத மோதல்
இந்த ஐந்தும் தான் டாப் 5 சிக்கலாக உள்ளன. சைபர் பாதுகாப்பு, சமத்துவமின்மை, மனித உரிமைகள் சிதைவு, மாசுபாடு மற்றும் கட்டாய இடப்பெயர்வு ஆகியவையும் இந்த லிஸ்டில் உள்ளன.
நீண்ட கால ஆபத்துகள்
தீவிர வானிலை நிகழ்வுகள்
பயோடைவர்சிட்டி இழப்பு மற்றும் சூழலியல் சீர்குலைவு
புவி அமைப்புகளில் ஏற்படும் மாற்றம்
பொய் தகவல்கள்
ஏஐ தொழில்நுட்பம்
இவை டாப் 5 பிரச்சினைகளாக உள்ளன. இவை தவிர இயற்கை வளங்கள் பற்றாக்குறை, சமத்துவமின்மை, சைபர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பிளவு, மாசுபாடுகள் ஆகியவை டாப் 10 பிரச்சினைகளில் வருகிறது.












Click it and Unblock the Notifications