மதுரை: மதுரையின் ஒரே பவர் செண்டராக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மாறி வருவதாக தவெகவினர் மத்தியில் முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன. மதுரையில் தவெக சார்பாக இருக்கும் ஒரே அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் என்பதால், அத்தனை நிகழ்ச்சியிலும் தனக்கு முன்னிலை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல் எதிர்க்கட்சிகளும் நிர்மல்குமாரை கண்டுகொள்ளாததால், அவரின் கிராஃப் ஏறிக் கொண்டே செல்கிறது.
மதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் பவர் செண்டராக வலம் வந்தனர். திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் மூர்த்தி பவர் செண்டராக இருந்து வந்தார். தற்போது அந்த இடத்தை தவெக ஆட்சியில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பிடித்திருக்கிறார். மதுரையில் மட்டும் தவெக 8 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியும் கூட்டணி இருப்பதால், மொத்தமாக 9 இடங்கள் தவெகவுக்கு இருக்கிறது. மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சிடிஆர் நிர்மல்குமார் இருக்கிறார். மற்றொரு அமைச்சராக காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் இருப்பதால், அவர் பெரிதாக மாவட்ட அரசியலில் தலையிடுவதில்லை. இதனால் மதுரையில் சிடிஆர் நிர்மல்குமாரின் அதிகாரம் உச்சத்தில் இருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கூட அமைச்சர் ரமேஷை விடவும் சிடிஆர் நிர்மல்குமார் தான் அதிகமாக தென்பட்டார். தன்னை யாரும் ஓவர்டேக் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். தவெக எம்எல்ஏக்கள் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் பேனர், போஸ்டர்களில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் தவெக எம்எல்ஏ-க்களோ இப்போது கட்சிக்குள் வந்து அமைச்சராகிவிட்டு தங்களுக்கே உத்தரவு போடுகிறாரே என்று முனுமுனுத்து வருகின்றனர். இதனால் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் கூட எம்எல்ஏ-க்கள் தலை காட்டுவதில்லை. அதேபோல் அமைச்சரின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். குறிப்பாக திருப்பரங்குன்றம் மாவட்டச் செயலாளர் மருதுபாண்டியன் அத்தனை விவகாரங்களிலும் தலையிட்டு வருகிறார். மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் அமைதியாகவே இருக்கின்றன. திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி எந்த விஷயத்தையும் பேசுவதே இல்லை. அண்மையில் நடந்த திமுக போராட்டத்தில் கூட மூர்த்தி கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி திமுகவே சைலண்ட் மோடில் இருப்பதால், அதிமுக கண்ணை மூடி கொண்டிருக்கிறது. ஆர்பி உதயகுமார் விஜய், த்ரிஷா என்று அட்டாக் செய்தாலும், சிடிஆர் நிர்மல்குமார் பற்றி வாயே திறப்பதில்லை. திமுக, அதிமுகவினர் வாயை மூடி அமைதி காப்பதை தவெக எம்எல்ஏ-க்களும் ரசிக்கவில்லை. இதனால் ஒரே பவர் செண்டராக சிடிஆர் நிர்மல்குமார் உருவெடுத்துவிட்டதாக பேச்சுகள் அதிகரித்துள்ளன.