சீனா மாதிரி ஆகிவிடக்கூடாது.. இந்தியாவை குறி வைத்து மீண்டும் மீண்டும் அடிக்கும் டிரம்ப்.. என்ன காரணம்

  • நியூயார்க்: சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2001 செப்டம்பர் மாதத்தில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். 1998-ல் பொக்ரானில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனையை அடுத்து, இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்த பல பொருளாதார தடைகளை அப்போது அவர் முழுமையாக நீக்கினார். அணு சக்தி நாடாக உருவெடுத்த இந்தியாவை உலக நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

    Advertisement

    ஆனால், சரியாக 25 ஆண்டுகள் கழித்து, இப்போது 2026-ல், வாஷிங்டன் மீண்டும் ஒருமுறை இந்தியா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் வரிகளையும் சுமத்தத் தயாராகி வருகிறது. இம்முறை அணு ஆயுதத்திற்காக அல்ல; மாறாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக.

    Advertisement

    அமெரிக்காவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு புதிய மசோதா சமீபத்தில் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு 'லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026' என்று பெயர்.

    செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சட்டத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டம் அமெரிக்க அதிபருக்கு ஒரு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்குகிறது. ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    Advertisement

    காகித அளவில் இந்த சட்டம் பொதுவானதாக இருந்தாலும், இதன் முக்கிய இலக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள்தான். ஏனென்றால், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எரிசக்தி வாங்கும் நாடுகள் இவைகள்தான். அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டால் இது குறித்து வெளிப்படையாகவே பேசினார். "சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவிடம் வாங்குவதை நிறுத்திவிட்டு, வேறு எங்காவது உங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால் நன்றாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

    இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு? டெல்லியின் அதிரடி பதில்

    அமெரிக்கா இப்படி வரி அச்சுறுத்தல் விடுப்பது, இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த நட்புறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக அறிக்கை வெளியிட்டது. "இந்த விவகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே உயர் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இது இரு நாடுகளின் பரஸ்பர உறவில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று இந்தியா எச்சரித்துள்ளது. சர்வதேச அரசியல் ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் இதுபற்றி கூறுகையில், "கடந்த ஓராண்டாக இந்தியா-அமெரிக்க உறவில் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த புதிய தடைச் சட்டம் விழுந்த அடிகளிலேயே மிகப்பெரிய அடியாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    1998-ல் இந்தியா சொந்தப் பாதுகாப்பிற்காக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டபோது தடைகளை சந்தித்தது. ஆனால் 2026-ல், தன் நாட்டு மக்களின் அன்றாடத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசலுக்காக கச்சா எண்ணெய் வாங்குவதற்கே அமெரிக்கா மிரட்டல் விடுக்கிறது.

    Advertisement

    அமெரிக்கா ஏன் இந்தியாவை குறிவைக்கிறது? சீனாவின் வரலாறு தரும் பாடம்!

    ட்ரம்ப் நிர்வாகம் ஏன் இந்தியா மீது இவ்வளவு கடுமையான அழுத்தத்தை போடுகிறது? சர்வதேச நிபுணர்கள் இதற்கு ஒரு ஆழமான காரணத்தைக் கூறுகிறார்கள். எதிர்காலத்தில் சீனா போல இந்தியாவும் அமெரிக்காவுக்குப் போட்டியாக ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக மாறிவிடக்கூடாது என்பதே வாஷிங்டனின் உண்மையான பயம்.

    சீனாவிடம் விட்ட அதே தவற்றை இந்தியாவிடமும் விட்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் இதனை வெளிப்படையாகவே கூறினார்.

    Advertisement

    "20 ஆண்டுகளுக்கு முன்பு சீனா விஷயத்தில் செய்த அதே தவற்றை, நாங்கள் இந்தியா விஷயத்தில் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சந்தைகளை வளர்த்துக்கொள்ள நாங்கள் அனுமதிப்போம்; பிறகு பார்த்தால் பல வணிகத் துறைகளில் நீங்கள் எங்களையே வீழ்த்தி விடுகிறீர்கள்" என்று அவர் நேரடியாகவே தெரிவித்தார்.

    சீனா விஷயத்தில் அமெரிக்கா செய்த அந்த 'தவறு' என்ன?

    1970-களில் இருந்து அமெரிக்க அதிபர்கள் சீனாவுடன் நட்பை வளர்த்தனர். வர்த்தகச் சலுகைகள், பெரும் முதலீடுகள், கல்வி மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவுக்கு வாரி வழங்கினர். 1990-களில் பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவிற்கே மாற்றின.

    இதனால் ஏற்பட்ட மாற்றம் மிகப்பெரியது.. 1980-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 191 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இது அப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தில் வெறும் 7 சதவீதம். ஆனால், 2025-ல் உலக வங்கி தரவுகளின்படி சீனாவின் GDP 19.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துவிட்டது.

    1990-ல் உலக உற்பத்தியில் சீனாவின் பங்கு வெறும் 3 சதவீதமாக இருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தகவல்படி, 2023-ல் இது 31.8 சதவீதமாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் பங்கு 23.6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக சரிந்தது.

    சீனா பணக்கார நாடாக மாறினால் அது ஒரு ஜனநாயக நாடாக மாறி தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று அமெரிக்கா தப்புக் கணக்கு போட்டது. ஆனால் சீனாவோ மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்து, அமெரிக்காவையே மிரட்டும் ஒரு சர்வதேசப் போட்டியாளராக மாறியது. இந்த கசப்பான அனுபவம்தான் இப்போது அமெரிக்காவை யோசிக்க வைக்கிறது. தங்களுக்கு அடிபணிந்து செல்லும் ஒரு கூட்டாளியாகவே இந்தியா இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

    அமெரிக்காவின் இந்த மிரட்டல் இந்தியாவிடம் பலிக்குமா?

    நேட்டோ அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகளைப் போல தங்களுக்குக் கட்டுப்பட்டு இந்தியா நடக்க வேண்டும் என்று வாஷிங்டன் எதிர்பார்க்கிறது. ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அப்படிப்பட்டது அல்ல.

    இந்தியா எப்போதும் தன் நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. இதனால்தான் இந்தியாவால் அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர்களையும் வாங்க முடிகிறது, பிரான்ஸிடம் போர் விமானங்களையும் பெற முடிகிறது, சீனாவிடம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் வாங்க முடிகிறது, அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயையும் பெற முடிகிறது. 2026 ஜூலை மாத கணக்கின்படி, இந்தியா வாங்கிய மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு மட்டுமே 52 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.

    இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. உலக அளவில் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில், ரஷ்ய எண்ணெயை உடனே நிறுத்துவது இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எனவே தங்களின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது.

    இந்த அழுத்தத்தை இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

    1998-ல் இந்தியா மீது அமெரிக்கா தடைகளை விதித்தபோது, ஆயுத விற்பனையை நிறுத்தியது, வங்கிக் கடன்களை முடக்கியது, சர்வதேச அமைப்புகளில் இந்தியாவை எதிர்த்தது. ஆனாலும் இந்தியா அந்த நெருக்கடியைத் தாங்கி நின்று தன் பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டது. 2001-ல் அமெரிக்காவே அந்தத் தடைகளை வாபஸ் பெற்றது. 2008-ல் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தமும் செய்தது.

    இப்போதும் அதே நிலைதான். 100% வரி விதிப்பு என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை இந்தியா தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பல நாடுகளில் இருந்தும் எண்ணெய் வாங்குவது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவற்றின் மூலம் இந்தியா இந்த தடையை முறியடிக்க முடியும்.

    அதே நேரத்தில், நட்புறவு என்பது அடிபணிந்து போவது அல்ல என்பதை அமெரிக்கா உணர வேண்டும். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய வளரும் நாட்டை அழுத்தம் கொடுத்து முடக்க நினைத்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை மட்டுமே கெடுக்கும். ரஷ்யாவின் வருமானத்தை குறைக்க நினைத்து இந்தியா மீது கை வைத்தால், அது உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும். இந்தியா தனது பொருளாதார வலிமையுடன் நிச்சயம் தொடர்ந்து முன்னேறும்.. அதை எந்த ஒரு மிரட்டலாலும் தடுத்து நிறுத்த முடியாது.

    English Summary

    Why Trump Administration Fears New Delhi Becoming Another China