வானியல் அதிசயம்.. புதுச்சேரியில் நிழல் இல்லா நாள்.. அபூர்வமான பூஜ்ய நிழல் நாளை ரசித்த மாணவர்கள்

  • புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள் என்ற வானியல் நிகழ்வைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருதய ஆண்டர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இந்த வானியல் நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.

    Advertisement

    பூமியின் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிழல் இல்லா நாள் நிகழ்கிறது. சூரியன் சரியாக தலைக்கு மேலே வரும் நாளில், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள எந்தவொரு பொருளின் நிழலும் தரையில் பக்கவாட்டில் விழாமல் அந்தப் பொருளின் அடிப் பகுதியிலேயே மறைந்துவிடும். இதுவே நிழல் இல்லா நாள் என்று அழைக்கப்படுகிறது.

    Advertisement

    புதுச்சேரியில் வடக்கை நோக்கிய நகர்வில் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்நிகழ்வு ஏற்பட்டது. தற்போது, தெற்கை நோக்கிய நகர்வில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று நிழல் இல்லா நாள் ஏற்பட்டது. முந்தைய காலங்களில் செங்குத்தான குச்சியின் நிழலைக் கொண்டே நேரம் மற்றும் பருவகால மாற்றங்கள் கணிக்கப்பட்டன. அதுபோல, இன்று நடைபெற்ற பூஜ்ய நிழல் நாளன்று மாணவர்கள் நேரடியாக குச்சிகளின் மூலம் நிழலின் நீளம், சூரியனின் சரிவு கோணம் கண்டறிவது போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மாநில பயிற்சி மையம், புதுச்சேரி அறிவியல் இயக்கம், பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், இருதய ஆண்டவர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    Advertisement

    வானியல் சார்ந்த மூட நம்பிக்கைகள், அறிவியல் உண்மைகளை மாணவர்கள் மற்றும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.
    இந்த நிகழ்வை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளித்தனர்.

    English Summary

    Students and the public in Puducherry witnessed the rare Zero Shadow Day and explored the science behind the astronomical phenomenon through practical experiments.