ராமநாதபுரம்: விவசாய வேலைகளுக்கு தேவையான கருவிகளை வாங்க வேண்டுமென்றால் நிறைய செலவாகும்... குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் ஒவ்வொரு முறையும் இயந்திரங்கள், கருவிகளுக்கு அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு நவீன வேளாண் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன... அது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இப்போது வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான்.. நம்முடைய விவசாயிகளின் செலவை குறைத்து, விவசாய பணிகளை எளிதாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விவசாய பணிகளுக்கு தேவையான கருவிகளை மானியத்தில் வாங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவாடானை வட்டார விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு தேவையான 5 முதல் 8 கலப்பைகள், அறுவடைக்கு பிறகு வைக்கோலை எளிதாக சுருட்டி சேமிக்க உதவும் கருவி, கிணறுகளில் பயன்படுத்தப்படும் நீர் மூழ்கி மோட்டார் ஆகியவற்றை 50 சதவீத மானியத்தில் பெறலாம். இதுமட்டுமல்லாமல், விவசாய பணிகளுக்கு தேவையான டிராக்டர் மற்றும் பிற இயந்திரங்களை குறைந்த விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அத்தியாவசிய பணிகளை குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும். இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள் திருவாடானை வேளாண் அலுவலகத்தை அணுக வேண்டும். அப்போது நிலப்பட்டா, ஆதார் அட்டை நகல், அடங்கல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். திட்டத்திற்கான தகுதி மற்றும் கருவிகள் கிடைக்கும் விவரங்களை வேளாண் அலுவலகத்தில் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். தமிழக வேளாண்மைத் துறையின் உழவன் செயலி மூலமாகவும் விவசாயிகள் பல்வேறு அரசு மானியத் திட்டங்களை தெரிந்துகொள்ளலாம். விதைகள், வேளாண் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கான மானிய விவரங்கள் மட்டுமின்றி, பயிர் சாகுபடி, வானிலை மற்றும் சந்தை விலை தொடர்பான தகவல்களையும் இந்த செயலியில் அறிந்துகொள்ள முடியும். தகுதியுள்ள திட்டங்களுக்கு செயலி வழியாக விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இதனிடையே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் பெறலாம். அதற்கு இணையாக 50 சதவீத அரசு மானியமும் வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை பின்நிகழ்வு மானியம் கிடைக்கும். எனவே, திருவாடானை வட்டார விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்களை வேளாண் அலுவலகத்தில் தெரிந்துகொண்டு பயன்பெறலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு தகுதி, மானிய வரம்பு மற்றும் கருவிகள் இருப்பு குறித்த விவரங்களை உறுதி செய்துகொள்வது நல்லது.. மேற்கண்ட இந்த அறிவிப்பானது அந்த மாவட்ட விவசாயிகளுக்கு பெருத்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.என்னென்ன கருவிகள் கிடைக்கும்?
எப்படி விண்ணப்பிப்பது?
மானியத்துடன் கடன்