ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல.. மும்பை தோல்விக்கு காரணம் அம்பானியும், ஜெயவர்தனேவும் தான்!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.
சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 67 ரன்களையும், கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 54 ரன்களையும் குவித்தனர். மும்பை அணிக்கு இது மோசமான தோல்வியாக அமைந்துள்ளது. மொத்தமாக 9 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி, 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.

மும்பை அணியின் இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மட்டுமல்லாமல் இன்னும் சில காரணங்களும் அமைந்துள்ளன. மும்பை அணி நிர்வாகம் லெகசியை மையப்படுத்தி அணியை கட்டமைத்துவிட்டது. அதேபோல் கடந்த சில சீசன்களாகவே புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் யாருமே சோபிக்கவில்லை.
திலக் வர்மா மட்டுமே இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். மற்றபடி மும்பை அணியில் ஸ்கவுட்டிங் குழுவும் கூட பல்வேறு தவறுகளை செய்திருக்கிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா, பும்ரா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்களை கண்டறிந்து மும்பை அணிக்குள் கொண்டு வந்ததாலேயே அந்த அணி சாம்பியன் பட்டங்களை வென்றது.
ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் திலக் வர்மா, நமன் திர் ஆகியோரை மட்டுமே மும்பை அணி கண்டறிந்துள்ளது. மற்ற்படி பவுலர்களிலோ, ஸ்பின்னர்களிலோ மும்பை அணியில் புதிய மாற்றம் எதுவும் இல்லை. இதனால் அனுபவ வீரர்களின் வீக்னஸ் மற்றும் அவர்களின் பலம் எதிரணிகளுக்கு நீண்ட காலமாக தெரிந்துள்ளது. புதிய வீரர்களின் சர்ப்ரைஸ் இல்லாததால், அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.
இன்னொரு பக்கம் மும்பை அணி கண்டறிந்த அன்சுல் கம்போஜ், டிவால்ட் பிரெவிஸ், டிம் டேவிட் ஆகியோரையும் மீண்டும் வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் அனுபவ வீரர்களை மும்பை அணி நாடியதே அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது. இந்த அணுகுமுறையை மும்பை அணி மாற்றாத வரை, அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்வது கடினம்தான்.












Click it and Unblock the Notifications