5 விக்கெட்டுகள்.. லக்னோ வீரர் மோசின் கான் படைத்த பிரம்மாண்ட சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 4 ஓவர்களில் வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த மோசின் கான், ஐபிஎல் வரலாற்றில் கேகேஆர் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் உள்ளூர் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டிம் செய்ஃபெர்ட் - ரஹானே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் 2வது ஓவரை வீச மோசின் கான் வந்தார். அந்த ஓவரில் டிம் செய்ஃபெர்ட் டக் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து மீண்டும் 4வது ஓவரை வீசிய மோசின் கான் ரஹானே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் தொடர்ந்து 7வது ஓவரை மீண்டும் வீசினார். அந்த ஓவரில் ரோவ்மன் பவல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கேகேஆர் அணி தடுமாறியது. தொடர்ந்து 11வது ஓவரை வீச வந்த போது, அனுகுல் ராய் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் கேகேஆர் அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலமாக மோசின் கான் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் உள்ளூர் கிரிக்கெட்டர் என்ற பெருமையை மோசின் கான் பெற்றுள்ளார்.
அதேபோல் லக்னோ அணிக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையையும் மோசின் கான் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக மார்க் வுட் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் லக்னோ அணிக்காக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோசின் கான், 2022ஆம் ஆண்டிலேயே ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக வாங்கப்பட்டவர்.
ஆனால் தொடர்ச்சியான காயம் காரணமாக மோசின் கான் ஒரு சீசனை கூட முழுமையாக விளையாடியதே இல்லை. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மோசின் கான், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவிருந்த போதும், காயம் அடைந்தார். இந்த சீசன் தொடங்கப்பட்ட போதும் கூட மோசின் கான் காயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications