4வது முறையாம்.. போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸ்.. ஜெய்ஸ்வால் படைத்த தரமான ரெக்கார்ட்!
ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிக முறை சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் ஸ்டார்க் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் சிக்சரை விளாசினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இந்தப் போட்டியில் டெல்லி அணியில் மிட்சல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார்.

இதனால் முதல் ஓவரிலேயே மிட்சல் ஸ்டார்க் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். நீண்ட ஓய்வுக்கு பின் மிட்சல் ஸ்டார்க் பவுலிங் செய்வதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் அவர் வீசிய முதல் பந்தை ஜெய்ஸ்வால் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அந்த ஓவரின் 3வது பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி ஸ்டார்க் அசத்தினார்.
இருந்தாலும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசியதன் மூலமாக, ஜெய்ஸ்வால் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் இப்படி ஆட்டத்தின் முதல் பந்தில் சிக்ஸ் அடிப்பது 4வது முறையாகும். இதன் மூலமாக ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் அதிக முறை சிக்ஸ் அடித்தவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் பிரியன்ஷ் ஆர்யா 2 முறை சிக்ஸ் அடித்து 2வது இடத்தில் இருக்கிறார். இதையடுத்து நமன் ஓஜா, மயங்க் அகர்வால், சுனில் நரைன், விராட் கோலி, ராபின் உத்தப்பா, பில் சால்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒரு முறை சிக்ஸ் அடித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இதனால் ஜெய்ஸ்வாலின் ரெக்கார்ட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் ஜெய்ஸ்வால் சிறந்த ஃபார்மில் ஆடி வருகிறார். இதுவரை 10 இன்னிங்ஸில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால் 3 அரைசதங்கள் உட்பட 312 ரன்களை குவித்துள்ளார். ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், ஜெய்ஸ்வாலுக்கு எளிதாக 500 ரன்களை குவிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சீசனுக்கு பின் ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணிக்குள் வருவார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications