ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு.. அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது புகார்?
சென்னை: இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திக்க உள்ளது. அதிமுக இரண்டாக உடைந்திருக்கும் சூழலில், ஆளுநரை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் அதிமுக எம்எல்ஏ-க்கள் மீது புகார் கடிதம் அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னால் 22 எம்எல்ஏ-க்களும், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரின் பின்னால் 25 எம்எல்ஏ-க்களும் திரண்டுள்ளனர். இதில் எஸ்பி வேலுமணி தரப்பு தவெகவை ஆதரித்திருக்கிறது. இதனால் தவெக ஆட்சியை ஆதரித்த 17 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடமும் எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்தித்து சட்டசபைக் குழு தலைவர், கொறடா தொடர்பாக கடிதம் அளித்துள்ளது.
அதிமுகவின் இரு தரப்பு சார்பாக 3வது முறையாக சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் மீது 90 நாட்களுக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆளுநர் அர்லேகரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் ஆர்பி உதயகுமார், கேபி முனுசாமி, ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் தனிச் செயலாளரிடம் கடிதம் அளிக்க உள்ளனர். ஆளுநர் அர்லேகர் கேரளாவில் இருப்பதால், அவரின் தனிச்செயலாளரிடம் புகார் கடிதம் அளிக்க உள்ளனர்.
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களை அமைச்சராக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி எதிர்த்து வருகிறார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications