தேன்கனிக்கோட்டை ஆற்றங்கரையில் தேஜஸ்ரீக்கு நேர்ந்தது என்ன? காதலா? கொலை? உலுக்கும் கிருஷ்ணகிரி மர்மம்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அமைதியை உலுக்கும் வகையில், பெற்றோருக்கு எதிராக ஒரு இளம் பெண் கண்ணீர் மல்க அளித்திருக்கும் புகார் மனு சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. காதலுக்காக ஒரு பெண் எத்தகைய கொடூரமான சித்திரவதைகளை அனுபவிக்க முடியும் என்பதற்குச் சாட்சியாக, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயதான தேஜாஸ்ரீயின் வாக்குமூலம் அமைந்துள்ளது. என்ன நடந்தது?
தன்னுடைய காதல் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனது காதலன் தீபக் (21) மற்றும் உறவினர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் வந்த தேஜாஸ்ரீ, அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரு பகீர் புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் விவரித்துள்ள ஒவ்வொரு சம்பவமும் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

தேஜாஸ்ரீ தீபக் காதல்
தேஜாஸ்ரீயும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக்கும் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்குயிராகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் 2 பேருமே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தேஜாஸ்ரீயின் பெற்றோர் இந்த காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாதிப் பெருமைக்காகத் தன் மகளின் உணர்வுகளை மதிக்க தவறிய பெற்றோர், அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு தேடி கடந்த 2025 ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய தேஜாஸ்ரீ, தீபக்கின் வீட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்தார்.
தேன்கனிக்கோட்டை காதலர்கள்
பெற்றோரின் மிரட்டல்கள் எல்லை மீறியதால், அவர்கள் ஓசூர் அலசநத்தம் பகுதியில் உள்ள தீபக்கின் உறவினர் வீட்டில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அங்கு வந்த பெற்றோர் அடியாட்களுடன் புகுந்து தேஜாஸ்ரீயை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளனர்... அங்கிருந்துதான் தேஜாஸ்ரீயின் நரக வாழ்க்கை தொடங்கியுள்ளது. காமன்தொட்டி அடுத்த கோபச்சந்திரம் ஆற்றங்கரைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த பெண்ணுக்கு, ஊரே நடுங்கும் வகையில் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நில்லாமல், கணவன் இறந்தால் ஒரு பெண்ணுக்கு செய்யப்படும் கொடூரமான இறுதி சடங்குகளை, உயிருடன் இருக்கும்போதே தேஜாஸ்ரீக்குக் கட்டாயப்படுத்தி செய்து பார்த்துள்ளனர்
மொட்டை அடிக்கப்பட்ட காதலி
அந்தப் பெற்றோர். மேலும், கருச்சிதைவுக்கான மாத்திரைகளை வலுக்கட்டாயமாக அவருக்குக் கொடுத்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் சித்ரவதைகளைச் செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்றச் செயலால் நிலைகுலைந்து போன தேஜாஸ்ரீ, எப்படியோ போராடி கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கிருந்து தப்பி மீண்டும் தீபக்கின் இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே ஓசூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அவரது பெற்றோர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போதும் தீபக் தன்னை கடத்தியதாக அவரது பெற்றோர் பொய் புகார் அளித்து வருவதாகவும், தன்னை மீண்டும் பிரிக்க முயற்சிப்பதாகவும் தேஜாஸ்ரீ கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
"காதலித்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு துயரங்களை அனுபவித்த எனக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பும், அச்சுறுத்தல் விடுக்கும் என் பெற்றோர் மீது கடும் நடவடிக்கையும் தேவை," என அவர் அந்த மனுவில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications