Electrolyte Hacks: தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பது ஆரோக்கியமானதா? மருத்துவர்கள் எச்சரிக்கை!
டெல்லி: சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் 'எலக்ட்ரோலைட் ஹேக்குகள்' (Electrolyte Hacks) என்ற பெயரில், குடிநீரில் உப்பு சேர்த்து குடிக்கும் பழக்கம் ஒரு டிரெண்டாகப் பரவி வருகிறது. இது சிறந்த நீரேற்றத்தைத் (hyderation) தரும் என்று நம்பப்பட்டாலும், இத்தகைய பழக்கம் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தண்ணீரில் உப்பு சேர்ப்பது ஏன் ஆபத்தானது?
நமது அன்றாட உணவிலேயே உடலுக்குத் தேவையான சோடியம் போதுமான அளவு உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு கிளாஸ் தண்ணீரிலும் கூடுதல் உப்பு சேர்ப்பது பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஜூபிட்டர் மருத்துவமனையின் டாக்டர் அமித் சரஃப் விளக்குகிறார்.
உயர் இரத்த அழுத்தம்: உடலில் சோடியம் அளவு அதிகரிப்பது இரத்த அழுத்தத்தை நேரடியாக உயர்த்தும்.
சிறுநீரகப் பாதிப்பு: சிறுநீரக நோயாளிகள் கூடுதல் உப்பைத் தவிர்க்க வேண்டும்; அவர்களது உடல் சோடியம் சுமைக்கு மிகவும் உணர்திறன் கொண்டது.
இதயப் பிரச்சனைகள்: நீண்ட காலத்திற்கு அதிகப்படியான உப்பு உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
நீர் தேக்கம் (Water Retention): அதிக சோடியம் உடலில் தேவையற்ற நீர் தேக்கத்தை உண்டாக்கி உடல் வீக்கத்தை ஏற்படுத்தும்.
யாருக்கு உப்புக் கலந்த நீர் தேவை?
சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே தண்ணீரில் உப்பு அல்லது எலக்ட்ரோலைட்கள் சேர்ப்பது அவசியமாகிறது.
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள்.
வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது அதிக வியர்வை காரணமாக உடலில் இருந்து சோடியம் வெளியேறும் போது.
கோடை காலத்தில் அதிகப்படியான திரவ இழப்பு ஏற்படும் போது ஒரு சிட்டிகை உப்பு பயனுள்ளதாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர் தீபாலி சர்மா கூறுகிறார்.
பாதுகாப்பான மாற்று வழிகள்
சாதாரண உப்பைத் தண்ணீரில் கலந்து குடிப்பதற்குப் பதிலாக, மருத்துவ ரீதியாகத் தயாரிக்கப்பட்ட ஓ.ஆர்.எஸ் (ORS) அல்லது எலக்ட்ரோலைட் பானங்கள் மிகவும் பாதுகாப்பானவை. மேலும், இயற்கையான நீரேற்றத்திற்குப் பின்வருவனவற்றை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இளநீர்: இதில் இயற்கையாகவே பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
மோர்: சிறந்த செரிமானத்திற்கும் உடல் குளிர்ச்சிக்கும் ஏற்றது.
தர்பூசணி: நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்வது உடலை நீண்ட நேரம் நீரேற்றத்துடன் வைக்கும்.
சுத்தமான குடிநீர்: உடல் முக்கியமாகத் தண்ணீரையே நம்பியுள்ளது; அதிக சோடியம் தாகத்தை அதிகப்படுத்துமே தவிர தணிக்காது.
சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்து தகவல்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம். "ஒருவருக்குப் பயனுள்ளதாக இருப்பது, மற்றொருவருக்கு மருத்துவ ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தலாம்," என்று டாக்டர் சரஃப் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுநீரகம், இதயம், தைராய்டு கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி குடிநீரில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications