தேனி: தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களில் வன ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் ராணுவ வீரர்கள் முதல் சார்பதிவாளர் வரை 118 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 பேர் ராணுவமும் மற்றும் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எஃப்.) பணியாற்றுபவர்கள் ஆவர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பல சர்ச்சைகள் எழுந்தது. அதில் முக்கியமான சர்ச்சை என்றால், தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த புலிகள் காப்பக பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பல தலைமுறைகளாக வாழும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றக் கூடாது என 98 கிராம மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சூழலில் மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் வழக்கறிஞரிடம் 'மேகமலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, 'மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ளது. அந்த மக்களை அங்கிருந்து அப்புறப் படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் சில குடும்பங்கள் பல தலைமுறைகளாக அந்த பகுதியிலேயே வசித்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப் பட்டு, அதன் பின்னர் அப்புறப்படுத்தப்படுவர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இயங்கிவந்த விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த 3 மாதங்கள் கால அவகாசம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், 'பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது, அவற்றின் கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் வனப்பகுதியில் அனுமதிக்க முடியாது. இலவம் பஞ்சு தோட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில் எந்த ஒரு சலுகையும் காட்டக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யாருக்கும் நிலத்துக்கான பட்டா வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் துணை ராணுவப் படையை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டியது வரும் என்று நீதிபதிகள் கூறினார்கள். இதனிடையே ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.பரமேஸ்வர் கூறுகையில், 'புலிகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இன்னும் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. பல ஓய்வுபெற்ற தமிழக அதிகாரிகளும் வனப்பகுதியில் நிலங்களை ஆக்கிரமித்துள் ளனர். கட்டுமானம் தொடர்பாக அவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் திரும்ப வந்துள்ளன' என்று கூறினார்கள். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றார்கள். இதற்கிடையே இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வூதியர்கள் 118 பேரின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்த அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்த விவரங்களை சமர்ப்பிக்க துறை வாரியான அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வைத்தவ நாதன் உத்தரவிட்டார். மேலும், காவல் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 19 பேர், மின்வாரியத்தில் பணியாற்றுவோர் 11 பேர், அங்கன்வாடி, சத்துணவு திட்ட ஊழியர்கள் 13 பேர், கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர், பணியாளர்கள் 7 பேர், வனத்துறையில் பணியாற்றும் 5 பேர், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் 5 பேர், தபால் துறை, மருத்துவத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட இதர துறைகளில் பணியாற்றும் 8 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களில் ஒருவர் சார்பதிவாளராக உள்ளதாகவும், போலீசாரில் ஒருவர் உளவுப்பிரிவில் பணியாற்றுவதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் வனத்துறை தயாரித்த இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டி யலில் ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், போலீசார் உள்பட பலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 பேர் ராணுவமும் மற்றும் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எஃப்.) பணியாற்றுபவர்கள்.