திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது ஊத்துக்குளியில்?
விஜயமங்கலம் சாலையில் அமைந்துள்ள காக்காபள்ளம் என்ற இடத்தில், அதிவேகமாக வந்த காரும் எதிரே வந்த டேங்கர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன... இதில் காரில் பயணித்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த பகுதி மக்கள், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளானவர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்பது போன்ற முழு விவரங்களையும் கண்டறியும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டனர். தற்போது விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல்லடத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, காரில் ஊத்துக்குளி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்களாம்.. காரில் முகிலன், அவரது மனைவி ஹேமா, மாமனார் ஈஸ்வரன், மாமியார் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் இருந்துள்ளனர். கார் ஊத்துக்குளி அடுத்த காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த ஒரு டீசல் டேங்கர் லாரி இவர்களது காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியிருக்கிறது.. இந்த விபத்தில் கார் துண்டு துண்டாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. ஹேமா மட்டும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.