தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகிவிட்டது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் பொது இடங்களில் பேசுவது சர்ச்சையாகி வருகிறது. புதிதாக அரசு பொறுப்பு கிடைத்திருப்பதால் சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டும் பேசுகிறார்கள். விஜய்யின் நண்பரும், அமைச்சருமான ஸ்ரீநாத், தூத்துக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஜய் குறித்து உணர்ச்சிவசத்துடன் பேசியுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சரும், முதலமைச்சர் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் தூத்துக்குடியில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், "என்னுடைய தாய் படித்த கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் உணர்வு பூர்வமாக உணர்கிறேன். தூத்துக்குடியில் படிக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் உணர்வு பூர்வமான உறவு இருக்கிறது. என்னுடைய அம்மா மட்டுமல்ல பெரியம்மா, சகோதரிகள் எல்லாரும் இங்கு தான் படித்துள்ளனர்.
இந்த இடத்தில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததில் சந்தோஷமாக உள்ளது. எல்லோரும் வந்தார்கள், படித்தார்கள், போனார்கள் என்றில்லாமல் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு விஷயங்களை எடுக்கிறார்கள். நமக்குள் விழிப்புணர்வு வரவேண்டும். இப்போது படிப்பவர்கள், ஏற்கனவே படித்து சென்றவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இன்றைக்கு சமூகவலைதளங்கள் வந்துவிட்டதால் அது மிகவும் எளிது. நான் சென்னை எக்மோர் டான் பாஸ்கோவில் படித்தேன். அலுமினி உள்ளிட்ட அதன் எந்த நிகழ்வையும் நான் மிஸ் செய்ய மாட்டேன். மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்பேன். அதை எல்லோருமே பின்பற்றினால் நாம் பயின்றி கல்வி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். படிக்கும்போது தான் ஆழமான நட்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரியில் உருவாகும் அந்த நட்பு வாழ்க்கை முழுவதும் அது பெரிய பந்தமாக தொடரும். நட்பை என்றைக்கும் பெரிதாக மதிக்க வேண்டும். நான் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் இன்றைக்கு மேடையில் அமைச்சராக நிற்கிறன். அதற்கு காரணம் என்னுடைய நண்பர், நம்முடைய முதலமைச்சர் ஜோசப் விஜய். அவரின் நண்பரால் இருப்பதாலேயே இந்த நிலைக்கு வந்துள்ளேன். என்றைக்கும் நட்பை விட்டு கொடுக்க வேண்டாம். அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்" என்றார்.நட்பு முக்கியம்
விஜய் தான் காரணம்