தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு உதவி பெறும் 6 வகுப்பு பள்ளி மாணவியை, ஆசிரியை தூண்டுதலின் பேரில் இரு மாணவர்கள், மர்ம உறுப்பில் தாக்கியதாக மாணவியின் தாய் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே நாசரேத் அடுத்த மூக்குப்பீறியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக உள்ளவர் சாந்தி. இவர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை கடுமையாக தாக்குவதும், மாணவ மாணவிகளை அவதூறாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாசரேத் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியை சாந்தி அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் இருவரை வைத்து மர்ம உறுப்பில் தாக்க சொன்னதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகவும், இன்று அந்த மாணவி பள்ளியில் வலியால் துடித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாயாரை வரவழைத்து அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். தொடர்ந்து மாணவி, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் கூறுகையில், "பள்ளியில் உள்ள ஆசிரியை சாந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனது மகளின் மர்ம உறுப்பில் இரண்டு மாணவர்களை வைத்து தாக்கியுள்ளார். இதில் எனது மகள் வலியால் துடித்துள்ளார். இன்று வலி அதிகமாக இருந்த காரணத்தால் என்னிடம் நடந்த விவரத்தை கூறினாள். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.