பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம்

  • விழுப்புரம்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதுவதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திமுவைச் சேர்ந்த முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

    Advertisement

    அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.விஸ்வநாதன் "ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்" என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.

    'ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்' என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    Advertisement

    இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்

    முன்னதாக முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருப்பதா வேண்டாம் என்பது குறித்து முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கொள்கை முடிவு எடுப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி விரைவில் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    governor to serve as the Chancellor of the university? ponmudi opposed Minister Viswanathan speech