பங்காளிகள் இனி பகையாளிகள்.. வர்த்தக போர் முற்றியது.. கனடாவை கடுமையாக பழிவாங்கும் டிரம்ப்!

  • வாஷிங்டன்: அமெரிக்காவிற்கும் அண்டை நாடான கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு எதிராக கனடா அரசு பதில் வரிகளை அறிவித்த சில நாட்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

    Advertisement

    அதன்படி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டீல் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

    Advertisement

    டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

    தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், கனடா பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றி லாபம் ஈட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார். "அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீது கனடா மிக அதிக வரிகளை விதித்து வருகிறது. இதனால் நமது அமெரிக்க விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே 60 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

    மேலும் பேசிய அவர், "அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்தால் வரி எதுவும் கிடையாது. கனடா அமெரிக்க சந்தையையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் தங்களுக்கு எல்லாம் உரிமை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், எங்களுக்கு கனடாவின் உதவி தேவையில்லை, அவர்களுக்குத்தான் அமெரிக்காவின் உதவி தேவை! என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    கனடாவின் அதிரடி பதிலடி நடவடிக்கை

    முன்னதாக, அமெரிக்கா சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிகள் மீது 50 சதவீத வரியை விதித்திருந்தது. இதற்குப் பதிலடி தரும் வகையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்கப் பொருட்களுக்கு நிகரான வரிகளை செப்டம்பர் 8 முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த பதில் நடவடிக்கையில் அமெரிக்காவின் எஃகு, பால் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகள் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியடைந்த நிலையிலேயே கனடா இந்த முடிவை எடுத்தது. கனடாவின் பொருளாதார நலன்களை பாதிக்கும் வகையில் இருக்கும் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஒட்டாவா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

    Advertisement

    முற்றி வரும் மோதலின் பின்னணி

    இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தக மோதல் கடந்த 2025-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. அப்போது பெரும்பாலான கனடிய இறக்குமதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரியை விதித்தது. பின்னர் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன், வாகனங்கள் மீதும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு கனடாவும் பலமுறை பதில் வரிகளை விதித்து வந்தது.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய 50 சதவீத கூடுதல் வரி நடவடிக்கை காரணமாக, அமெரிக்க சந்தையில் நூற்றுக்கணக்கான கனடிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, கனடிய மரப் பொருட்களின் மீதான வரி உயர்வு அமெரிக்காவில் கட்டுமானச் செலவுகளையும், வீடுகளின் விலையையும் அதிகரிக்கக்கூடும் என அமெரிக்க கட்டுமானத் துறை கவலை தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய வர்த்தகத்தை நம்பியிருக்கும் இருநாட்டு தொழில்துறை நிறுவனங்களும் இந்த மோதலால் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    Trade War Escalates: Trump Slaps Massive 50% Tariffs on Canadian Cars and Steel