வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு சுற்றுலா, தொழில் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளுக்காக செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு விசா பெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் விசா நேர்காணலுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் விசா பெறுவதற்கான செலவும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை சார்ந்த விதிகளை கடுமையாக்கி வருகிறார். இதனால் அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது என்பது நாளுக்கு நாள் சிரமம் ஆகி வருகிறது. டிரம்ப் அரசு இது தொடர்பாக புதிய ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
2025ம் ஆண்டில் இந்தியர்கள் அமெரிக்க விசா நேர்காணலுக்காக சராசரியாக 346 நாட்கள் காத்திருந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஓராண்டு காத்திருந்த பிறகே விசா நேர்காணலுக்கான அனுமதி கிடைத்துள்ளது. இங்கு நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் ஓராண்டில் விசா கிடைப்பதில்லை. விசாவுக்கான நேர்காணல் மட்டுமே கிடைக்கும். நேர்காணலிலும் கூட விசா நிராகரிக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம்! கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இந்த காத்திருப்பு காலம் வெறும் 42 நாட்களாக இருந்தது. ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு பல்வேறு காரணங்களாலும் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளாலும் இப்போது காத்திருப்பு காலம் 8 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டி இருக்கிறது. 2025 ஆண்டில் இந்தியாவில் மட்டும் 14.5 லட்சம் விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை கையாளும் பணியில் வெறும் 68 தூதரக அதிகாரிகள் மட்டுமே இருந்துள்ளனர். அதாவது ஒரு அதிகாரியும் சராசரியாக 21,401 விண்ணப்பங்களை பிராசஸ் செய்ய வேண்டி இருந்துள்ளது. போதிய அளவு ஊழியர்கள் இல்லாதது பணிச்சுமை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவே தாமதத்திற்கு பிரதான காரணமாக இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்தும் அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அமெரிக்கா முழுவதும் விசிட்டர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2019ல் 92 லட்சமாக இருந்த நிலையில், 2025ல் அது 1.17 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் விசா விண்ணப்பங்களை கையாளும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 2024ல் 1,342ஆக இருந்த நிலையில், 2025ல் 904 ஆக குறைந்துள்ளது. அதாவது ஒரு பக்கம் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மற்றொரு பக்கம் அதை கையாளும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் விசிட்டர் விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு காலமும் உயர்ந்துள்ளது. 2019ல் 26 நாட்களில் இருந்து அது 2025ல் 201 நாட்களாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 17ம் அமெரிக்க வெளியுறவு துறை B1/B2 சுற்றுலா மற்றும் பிஸ்னஸ் விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் குறித்த விவரங்களை வெளியிட்டிருந்தது. அதில் ஹைதராபாத்தில் காத்திருப்பு காலம் சுமார் 12 மாதங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 11.5 மாதங்களாகவும், டெல்லியில் 10 மாதங்களாகவும் காத்திருப்பு காலம் உள்ளது. சென்னையில் சுமார் 7.5 மாதங்களும், கொல்கத்தாவில் 6.5 மாதங்களும் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேநேரம் இவை நிரந்தர காலக்கெடுக்கள் அல்ல. சில சமயங்களில் கூடுதல் ஸ்லாட்களும் கூட ரிலீஸ் ஆகும். எனவே, அதை கவனித்து புக் செய்தால் முன்கூட்டியே கூட விசா கிடைக்கும். மாணவர்களுக்கான F, M, J விசாக்களுக்கு காத்திருப்பு காலம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. B1/B2 விசா மற்றும் மாணவர்களுக்கு இதுவரை 185 அமெரிக்க டாலர்கள் விசா கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 2025ல் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு. கூடுதலாக 250 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இந்த தொகை பணவீக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அமெரிக்கா செல்ல திட்டமிடும் இந்தியர்கள் விசா கோரி கிட்டத்தட்ட ஓராண்டு காத்திருக்க வேண்டி உள்ள நிலையில், இன்னொரு பக்கம் விசாவுக்கான செலவுகளும் கணிசமாக அதிகரித்து வருகிறது.அமெரிக்க விசா நேர்காணல்
விசா விண்ணப்பம்
ஊழியர்கள் எண்ணிக்கை
விசா