For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியின் - "இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" - நவீன அரசியல் ஆகுமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு தொடர்பாக அமெரிக்காவில் இருந்து நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் மாணிக்கம் விஜயபானு (டெக்சாஸ், ஆஸ்டின்) எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை:

ரஜினியின் திடீர் அரசியல் பிரவேச அறிவிப்பு, தமிழக கூட்டணி அரசியல் எதிர்பார்ப்பை குழப்பி இருப்பது என்னவோ நிஜம். இனி தேர்தல் வரை பல மாற்றங்களை எதிர் பார்க்கலாம்.

தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் ஒருபுறமும், எடப்பாடி பழனிசாமி மற்றொரு புறமும் கூட்டணி குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் தான், ரஜினி தீடீர் என தன் வருகையை அறிவித்து இருக்கிறார். இதில், தி.மு.க ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளோடு வியக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு வலுவான இடத்தில உள்ளது. அதேபோல, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க மூன்று வருடத்திற்கு முன்பு துவக்கத்தில் இருந்ததை விட, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதன் கூட்டணிகளோடு மேலும் உறுதியாகவே உள்ளது. இதுபோக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர், தே.மு.தி.க, அ.ம.மு.க, ப.மா.க போன்ற கட்சிகள் 3-5% சதவீத வாக்கு எண்ணிக்கை இருப்பை நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக பதிவு செய்து உள்ளனர். முக்கியமாக, மக்களுக்கு இந்த கட்சிகளிடம் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவர்கள் எடுத்த வாக்குகள் அந்த காலகட்டத்துக்கும், அப்போது இருந்த வாய்ப்புகளின் அடிப்படையில் கிடைத்தது என்பதே மிக உண்மை. இதில் ரஜினியின் இடம் எது? எந்த கட்சியின் கூட்டணி பிரிந்து, வாக்கு சிதறி அது ரஜினியின் வாக்காக மாற வாய்ப்பு உள்ளது?

உண்மையிலேயே தமிழக அரசியலில் வெற்றிடமா, அதை ரஜினியின் வருகை நிரப்புமா என ஏகப்பட்ட கேள்விகள். கொஞ்சம் ஆழமாக பாப்போம்.

Analysis of Actor Rajinikanths Political Entry

கவர்ச்சி ஆளுமையா / செயல் ஆளுமையா?

ஒரு அடிப்படை கேள்வி. பாமர, அடித்தட்டு மக்களுக்கு, அல்லது படித்த, அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு ரஜினி மேல் இன்னும் இருக்கும் தயக்க கேள்விகள் என்ன? முக்கியமாக, அவரிடம் இருப்பது கவர்ச்சி ஆளுமையா? அல்லது பொதுமக்கள் எதிர்பார்ப்பை செய்து முடிக்கும் செயல் ஆளுமையா?

கேள்விக்கு காரணம், அவரே இதற்கு முன் மேடையில் கூறியது போல, அவர் தொழில் இதுவரை வேறு. பொதுமக்கள் சேவையை முழு நேரமாக செய்தவர் அல்ல. குறிப்பாக, 2017 டிசம்பர் தொட்டு இன்று வரை பல கட்டங்களில் அவர் பேசிய நிகழ்வுகளை உற்று நோக்கினால், பேச்சின் ஏதோ ஒரு ஓரம், ஒரு வெளிப்படை கருத்து ஒளிவும், தயக்கமும் ஒன்றாக பிசைந்த மனநிலை அல்லது ஒரு கருத்து தெளிவின்மையை காண முடியும். கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு அவருடைய மன்ற உறுப்பினர்களை சந்தித்து விட்டு பேசிய போது கூட இதே நிலைப்பாடு நீடித்தது. இந்த வித்தியாசமான நிலைப்பாடு தான் ஒரு சராசரி வாக்காளனை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

தலைமையின் ஆணிவேர் எது?

மக்கள் தங்களை வழிநடத்த விரும்பும் தலைவனிடம் என்ன எதிர் பார்க்கிறர்கள் என்பதை விட, நம்மிடம் இருக்கும் திறமைகள், எண்ணம், அதற்கான செயல் திட்டங்கள் அதற்கு தகுதியானதா என்பதை சீர்தூக்கி பார்க்கும் அகஆய்வு ஒரு தலைமை பண்பிற்கு மிக முக்கியம். குறிப்பாக, சுயநலமின்மை, செயலில் முனைப்பு, செய்து முடிப்பார் என்ற எண்ணத்தை அழுத்தமாக வெளிப்படுத்தும் ஆளுமை, சமூகத்திற்கு எதிர் கருத்தாக இருந்தாலும் அதில் பொதிந்து இருக்கும் உண்மை அறிந்து அதன் பின் பிடித்து நிற்கும் பிடிவாத குணம், பேரிடர் காலத்தில் துணித்து வேகமாக முடிவெடுக்கும் திறன், 50 பேர் கொண்ட "தமிழ்" என்ற வார்த்தை சரியாக எழுத, படிக்க தெரியாத யாரோ கேட்கும் அனாவசிய கேள்விகளை நிராகரித்து பயணிக்கவும், ஒரு பள்ளி சிறுவன் கேட்கும் அர்த்தமுள்ள கேள்விக்கு கூட அழுத்தம் திருத்தமாக பதில் சொல்லவும், அதில் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்கவும் துணிவு வேண்டும். இவை அனைத்துமே நல்ல தலைமைக்கு ஆதிமூலம்.

உதாரணத்திற்கு, உலகின் எந்த துறை சார்ந்த தலைவரை உற்று நோக்கினாலும், அனைவர்க்கும் உள்ள ஒற்றுமை - அந்தந்த துறையை சார்ந்த, சாதாரண மக்கள் புரியும்படி தெளிவான பேச்சு, குழப்பமற்ற திட்டம், வெற்றியோ, தோல்வியோ அதை அறிவித்து பின் வாங்காமல் அதன் பின் வெறிபிடித்து பயணிக்கும் பாய்ச்சல் இருக்கும். இதில் , அமெரிக்காவோ, இந்தியாவோ, அரசியல்வாதியோ, தொழிலதிபரோ எல்லோருக்கும் உள்ள பொதுவான அடிப்படை தகுதி இது. இதில் ரஜினியின் தனிப்பட்ட பார்வையை இதுவரை அவர் அழுந்த பதியவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

கடந்த 2017 டிசம்பர் அரசியல் விஅறிப்பு தொட்டு, தற்போது நடக்கும் பல நிகழ்வுகள் வரை, ரஜினி தன் கருத்தை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் இருந்தும், அதற்கு அழுத்தமாக தன் கருத்துக்களை பதியாமல், அல்லது தொடாமல் கடந்து போன நிகழ்வுகளே அதிகம். இது போன்ற தருணங்களில் நாம் வெளிப்படையாக சொல்லும் கருத்துக்கள், ஆதரவுகள், எதிர்ப்புகள் ஒரு சாதாரண பொது மனிதருக்கு கூட பொருந்தும் எனும் பொழுது, ஒரு மாற்று அரசியல்வாதியாக, புதிய அரசியலை கொண்டு வர விருப்பம் என்று சொல்பவரின் பங்களிப்பு இங்கே மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படி பகிர்ந்திருந்தால் சராசரி வாக்காளனுக்கு, பொது மக்களுக்கு ரஜினியின் நிலைப்பாட்டை தெளிவாக புரிய வைக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சனை, தூத்துக்குடி சம்பவம், 8 வழி சாலை திட்டம், கடந்த சில வாரமாக டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் என்று இந்த பட்டியல் வெகு நீளம். இதில் அரசியல்வாதியாக இல்லாமல், தனிப்பட்ட அவர் கருத்து என்ன என்பது இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

இது போன்ற பொது பிரச்சனைகள் கடந்து, அவருடைய ஆன்மீக அரசியல், மாற்று அரசியல் பார்வை எந்த கோணத்தில் இருக்கும் என்ற மிகப்பெரிய கேள்வி பல்வேறு வழிகளில் அலசப்படுகிறது.

ரஜினியின் பார்வை எப்படி இருந்தாலும், நடப்பதொன்றும் 17ம் நூற்றாண்டு அல்ல. அறிவியல் யுகம். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சிறு நகர்வும் மனிதனின் நியூரானுக்கு அடுத்த நொடி கடத்தப்படுகிறது. தகவல் பரிமாற்றம் அத்தனை வேகம். பத்திரிக்கை நடத்துவது, படிப்பது, எழுத்து , கருத்து, பகிர்வு , எதிர்ப்பு,கேலி, கொடுமை, துயரம் என எந்த இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் எந்த ஒரு செயலும் இந்தனை வேகத்தில் உலகில் இதுவரை பயணிக்கவில்லை. இது அரசியலிலும் ஆழமாக பிரதிபலிக்கிறது. நாம் எடுக்கும் முடிவுகள், அதை வழிமுறை படுத்தும் முறைகள், அது சென்றடையும் இலக்குகள் என, எல்லாமே 30 வருடத்திற்கு மேல் நாம் பார்த்த அரசியல் பாதையில் இருந்து மாறுபட்டு வேறு தளத்தில் பயணிக்கிறது.

இப்படிப்பட்ட மாறுதலான நேரத்தில், இதற்கு ஏற்றவாறு புதுப்பித்த அரசியல் பார்வை என்பது மிக அவசியம். தற்போது மக்களின் ஒரே எதிர்பார்ப்பு, புது ரத்தம் பாய்ச்சிய சிந்தனை, அதை செயலில் காட்டுதல் மற்றும் செய்து முடித்தல். இதில், நம் நெஞ்சை பிசையும் துயரப் பிரச்சனைகள் நிரம்ப உண்டு. மது ஒழிப்பு துவங்கி, லஞ்சம் /ஊழலுக்கு கடும் தண்டனை, தரமான இலவச கல்வி, விவசாயம் முன்னுரிமை, இலவச மருத்துவம், சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு, தரமான சாலைகள், உழவர் நலம், பெண்கள்/குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் அத்துமீறல் பாதுகாப்பு, காவலர்/மருத்துவர் /செவிலியர் முன்னேற்றம், முதியோர் நலம், வேலைவாய்ப்பு , சுயதொழில் முன்னேற்றம், தாய்மொழி /தமிழ் /இலக்கிய மேம்பாடு, அறிவியல் ஆய்வு, இளைஞர் நலம், உலகத் தர விளையாட்டு மேம்பாடு என ஒவ்வொரு துறைகளிலும் சுனாமி வெள்ளம் போல் கரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஏராளமாக காத்திருக்கிறது.

எனவே, இதுபோன்ற மக்களின் தேவைகளை நன்கு புரிந்து அதற்கு ஏற்ற நவீன, கணினி மயமாக்கப்பட்ட, தொழில் நுட்ப வழியிலான புதிய திட்டங்கள், சட்டங்கள் செயல்படுத்தி, வெறும் வெற்று தேர்தல் வாக்குறுதியாக இல்லாமல் அடிநெஞ்சில் இருந்து முன்னுரிமை அளிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் எதிர்நோக்கும் வேலையை செய்து முடிக்க இயலாமல் போகுமோ என்று வரப்போகும் எந்த அரசுக்கும் பயம் இருக்க வேண்டும். தேவையற்ற, வளர்ச்சிக்கு உதவாத, பழைய வழிமுறை திட்டங்களை களைந்து, நவீன அறிவியல் உத்திகளை, வழிமுறைகளை, பயன்படுத்தி அதனை சீரமைக்கும் ஆர்வம், முனைப்பு, துணிச்சல் வேண்டும்.

இத்தனை எதிர்பார்ப்புக்கு இடையில், ரஜினியின் அரசியல் பயணம் எதை நோக்கியதாக இருக்கும்? மாற்று அரசியல் பார்வை எப்படி இருக்கும்? மேல்சொன்ன ஒவ்வொரு விஷயத்திலும் ரஜினி எப்படி கையாள போகிறார்? என்பது மட்டுமே ஒரு சராசரி வாக்காளனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எத்தனை நாட்களில் நடத்த இயலும் என்பதை விட, ரஜினியின் மாற்று அரசியல் பாதையின் பயண திட்டமும், அதற்கான தெளிவான வழி முறைகளும், அதில் அடைய இருக்கும் இலக்கும் என்ன என்பது மட்டுமே இங்கு மிகப்பெரிய கேள்வி.

அடுத்து, எந்த சூழ்நிலையிலும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி எதிர் அரசியல் செய்யும் எந்த கட்சிக்கும் இந்த கேள்வி.

அரசியல் என்பது 10000 ரூபாய் முதல் போட்டு 50000 அள்ளுவது எப்படி என்று மாட்டின் அடிபிடித்து பார்க்கும் வியாபாரம் அல்ல. பொதுச் சேவை. அங்கு கக்கனும், காமராஜரும், ராஜாஜியும், தெரசாவும், குக் (அணை கட்டியவர் ), மவுண்ட் பேட்டனும் எல்லோரும் ஓன்று. உற்று நோக்குங்கள். மேல் சொன்ன அனைவருக்கும் ஒன்று மொத்த பொருந்தும். அது தன்னலம் அற்ற பொதுமக்கள் சேவை நோக்கம். இவர்களில் எவரேனும் அடுத்த அரசியல் கட்சியையோ அடுத்த ஆட்களையோ அவரகள் பதவியில் இருந்தபோது தரக் குறைவாக பேசி இருக்கிறார்களா? அவர்கள் ஆர்வப்பட்டு விருப்பப்பட்டு தேர்தெடுத்த மக்கள் சேவை வேலையை, மக்கள் நினைத்தை விட விஸ்வரூபம் எடுத்து காட்டியதில் மட்டுமே நம் மனதில் இன்றுவரை நிற்கிறார்கள்.! அவர்களை நாம் எத்தனை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஒன்று மட்டுமே தெரியும். சுயநலமற்ற மக்கள் சேவை!. தெளிந்த எண்ணம்! பரந்த மனப்பான்மை.!

கலாம் அய்யா, சகாயம் IAS, போன்ற விளம்பரம் அற்ற, பணபலம் அற்ற, திறமையான, ஒரு நல்ல, தனி மனிதர்களின் தன்னலமற்ற செயல்கள் கோடி மக்களை சென்று பயன் அடைய முடியுமானால், மிகப்பெரிய கட்சி நடத்தும் உங்களுக்கு என்ன குறை? உங்கள் கட்சியோ, உங்கள் என்னமோ, செயலோ மேம்படுத்தப்பட்டது என்றால் குறை கூறுவதை விட்டு, செயலில் நடத்தி காட்டுங்கள். மக்கள் நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களை பின் தொடருவார்கள்.குறைகளை மட்டுமே கூறுவதற்கும், தவறை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள வழி விடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒருவேளை, நாளை நீங்கள் செய்யும் விஷயங்கள் எதுவும் மக்களுக்கு திருப்தி இல்லை என்றால், எதுவும் சொல்லாமலேயே உங்களை எளிதாக கடந்து சென்று விடுவார்கள். அது ரஜினிக்கும் பொருந்தும்.

எப்போது உங்களின் அர்ப்பணிப்பு அவர்களின் எதிர்பார்ப்பு தாண்டி பயணிக்கிறதோ, யார் உதவியுமின்றி நீங்கள் அவர்களுடன் கலந்து வெகு உயரத்திற்கு சென்று இருப்பீர்கள். அதைவிட பெரிய மாற்றம், அர்ப்பணிப்பு இங்கு வேறெதுவுமில்லை.

யாதும் ஊரே..! யாவரும் கேளிர்..!

English summary
Here is an analysis article of Actor Rajinikanth's Political Entry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X