தமிழில் நவீன கவிதைகள் 4

Subscribe to Oneindia Tamil

(இக் கட்டுரை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இக் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்)

அன்றாட வாழ்வில் நம் பார்வையில் எத்தனையோ விஷயங்கள் படுகின்றன. நின்று கவனிக்கவோ, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கவோ நேரமற்றுக் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் யாராவது கவனித்து கவிதையாகச் சொன்னால் அட.. நன்றாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்வை கவிதைக்களனாகத் தெரிவு செய்கிற கவிஞர்கள் ஏராளம். அவர்களுள் பலர் வெறும் காட்சி விவரணையோடும் நல்ல படிமங்களோடும் நின்று விடுகின்றனர். விவரிக்கப்படும் காட்சியிலிருந்து ஒரு சிந்தனையை அதன் மூலம் ஒரு தேடலை நிகழ்த்திக் காட்டுகிற கவிதைகளை சிலர் எழுதுகிறார்கள். அன்றாட வாழ்வில் காணக்கிடைக்கும் விஷயங்களிலிருந்து வாழ்வின் அர்த்தம் தேட முனையும் சில கவிதைகள் மகாதேவனின் ஆம் நண்பர்களே அது தான் நடந்தது என்ற தொகுப்பில் காணப்படுகிறது.

----------------------------------

Bus standபேருந்தில் இருந்த வாடிக்கையாளருக்கு
எஞ்சிய சில்லறையைத் தர
நீ ஓடியபோது
ஏற்கனவே பிய்ந்திருந்த உன் செருப்பு
மீண்டும் பிய்ந்தது

நிலைகுலைந்து நீ தடுமாற
தோல் சீவிய வெள்ளரித்துண்டங்கள்
சிதறி விழுந்தன மண்ணெங்கும்

விசில் சத்தத்தை மட்டுமே
கேட்கும் செவிகளையுடைய ஓட்டுநர்
விசில் சத்தம் கேட்காததால்
ஓட்டிச்சென்று விட்டார் வாகனத்தை

எஞ்சிய சில்லறையைப் பறித்துவிட்ட
வாடிக்கையாளரும்
அமர்ந்துவிட்டார் அமைதியாய் இருக்கையில்

லோக்கல் வாட்டர் நிரம்பிய
பிஸ்லரி பாட்டில் வாங்கி
துண்டுகளைக் கழுவிக் கொண்டு
காத்து நிற்கிறாய் அடுத்த பேருந்திற்காக

முதுமைகூட விடுவித்திருக்கவில்லை
இக்கடும் உழைப்பிலிருந்து உன்னை

சூரியனோடு சேர்ந்து நிழலும் நகர
கூடையோடு சேர்ந்து நீயும் நகர்ந்து கொள்கிறாய்

காசு வாங்கிய பின்தான்
பொருள் தரவேண்டும் என்பதை
இதுபோல் வாகனத்தில்
போன ஒருவரிடமிருந்து
கற்றுக் கொண்டிருப்பாய் நீ

எஞ்சிய சில்லறையைத் தர
இனி ஓடக்கூடாதென்பதை
இன்றைய நிகழ்விலிருந்து
கற்றுக்கொள்ளக் கூடும் நீ

வருத்தமாக இருக்கிறது
நீ
நகர விரும்பும் திசையாயில்லை
நகர முடிந்த திசை

-- -மகாதேவன்

ஒரு வெள்ளரிக்காய் விற்கும் வயோதிகரை (ஆண்பாலா பெண்பாலா என்பது கவிதையில் சொல்லப்படவில்லை) மையமாகக் கொண்டு நிர்பந்தமயமான இந்த மனித வாழ்வைப் படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறார் மகாதேவன். அனுபவங்களிலிருந்து தான் எது தவறு எது சரி என்பதை அறிந்துகொள்கிறோம் என்பது கவிதையின் இரண்டாவது பாதியில் சொல்லப்படுகிறது. அவ்வனுபவ அறிவினை எதையாவது இழந்து தான் பெற முடிகிறது. அந்த வெள்ளரிக்காய் வியாபாரிக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கு வாழ விரும்பியதாய் இல்லை வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. எனவே கடைசிவரிகளில் நீ என்று சொல்லாமல் பொதுமைப்படுத்தியிருந்தால் இந்த கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் போல தோன்றுகிறது. மகாதேவன் எதையும் நீட்டி முழங்கிச் சொல்பவர். இன்னும் சொற்சிக்கனத்தை கடைபிடித்தால் இவரது கவிதைகள் மேலும் மிளிரும் என்று தோன்றுகிறது.

எனினும், பயணம் செய்யும் பேருந்துகளில் நிறுத்தங்களில் ஜன்னலோரம் வந்து வெள்ளரிக்காய் விற்கும் ஒரு உருவத்தைக் கண்முன்னே கொண்டுவந்ததோடு நான் போய்க்கொண்டிருக்கும் திசை தானா நான் போக விரும்பியது என்ற கேள்வியை என்னுள் ஏற்படுத்தி, கனவு கண்ட வாழ்வுக்கும் நடப்பு இருப்புக்குமான தொடர்பற்ற தன்மையை மனம் உணர, ஒரு மெளனம் வந்து கவிகிறது.

------------------------------

மகாதேவன் வட மாநிலங்களில் பழங்குடி கிராமங்களில், பாண்டிச்சேரி அரவிந்த சிரமத்தில், பணியாற்றியிருக்கிறார். பின்னர் காப்பி தோட்டங்களில் தினக்கூலியாக, லாரிகளில் க்ளீனராக, நட்சத்திர விடுதிகளில் மதில் சுவர் கட்டும் பணியாளராகவும் இருந்துள்ளார். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆம் நண்பர்களே, அது தான் நடந்தது என்ற கவிதைத் தொகுப்பு 2000-த்தில் வெளிவந்தது. உலகத்தமிழ்.காம் இணைய இதழில் தொடர் கட்டுரை எழுதினார். கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் வரும் காலங்களில் தான் எழுதப்போகும் நல்ல கவிதைகளுக்கான பயிற்சியே இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் என்று குறிப்பிடுகிறார்.

- எஸ்.பாபு([email protected])

இவரது முந்தைய படைப்பு:

தமிழில் நவீன கவிதைகள் 1

தமிழில் நவீன கவிதைகள் 2

தமிழில் நவீன கவிதைகள் 3

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+