For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழில் நவீன கவிதைகள்- எஸ்.பாபு(இக் கட்டுரை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.(RaayarKaapiKlub-subscribe@yahoogroups.com)

By Staff
Google Oneindia Tamil News

(இக் கட்டுரை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இக் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்)

தமிழில் நவீன கவிதைகள் கடந்த பத்தாண்டுகளில் வியத்தகு மாற்றங்கள் அடைந்து வந்துள்ளன. பிரமிள்,தேவதேவன், சி.மணி, நகுலன், விக்ரமாதித்யன், பிரம்மராஜன், வைத்தீஸ்வரன், கலாப்ரியா, கல்யாண்ஜிவரிசையில் அடுத்துவந்த இளம் கவிஞர்கள் தமிழில் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

மனுஷ்ய புத்திரன், எம்.யுவன், யூமா.வாசுகி, பாலைநிலவன், அப்பாஸ், குட்டி ரேவதி, மாலதி மைத்திரி, உமாமகேஸ்வரி, கனிமொழி, யவனிகா ஸ்ரீராம், கோகுல கண்ணன் என்று நம்பிக்கை அளிக்கும் கவிஞர்களின்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்னும் ஏராளமான கவிஞர்கள் ஒரே ஒரு தொகுப்பு வெளியிட்டுவிட்டுக்காணாமல் போய்விட்டாலும், உலகக் கவிதைகளின் தரத்தில் எழுதுகிறோம் என்று சிலர் குப்பைகளை கிறுக்கித்தள்ளினாலும், நல்ல கவிதைகள் அவ்வப்போது பளிச்சென்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்கின்றன.

தமிழில் தற்போதைய கவிதையின் நிலையை, உதாரணங்களுடன் அலசுவதே என் நோக்கம். (யாரோ வடிவேலுகுரலில் ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. என்று முனகுவது கேட்கிறது). உங்களின் ஆதரவைப்பொறுத்து தொடர்ந்து எழுதுவேன். முதலில் ஒரு எளிமையான கவிதையோடு தொடங்குவோம். பலர் எழுதும் வழவழ கவிதைகளைப் படிக்கும்போது சொற்சிக்கனத்துடன் கச்சிதமாய் அமைந்த இந்த கவிதைதான் என் நினைவுக்குவரும்.


பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்

வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.
- யுகபாரதி.

இக்கவிதையின் சிறப்பு அளந்து வைத்த வார்த்தைகள். ஒரு சொல்லை நீக்கினாலும் கவிதை சிதைந்துவிடும். அதேபோல ஒரு சொல்லை சேர்த்தாலும் கவிதை குலைந்துவிடும். கவிதை எழுதுவது என்பது வீடு கட்டுவது மாதிரி.ஆனால் சற்றே வித்தியாசமானது. வீடு கட்ட செங்கற்கள் ஒவ்வொன்றாய் அடுக்கிக்கொண்டே வந்தால் கடைசியில்ஒரு வீடு வரும். கவிதை அப்படியில்லை. செங்கற்களைக் (சொற்களை) குவித்துவிட்டு அதிலிருந்து ஒவ்வொருசெங்கல்லாக (சொல்லாக) உருவி எடுத்துக்கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் ஒரு வீடு (கவிதை) வரும்.

வயலில் வேலை செய்யும் தன் கணவனுக்குச் சாப்பாடு கொண்டுசெல்கிறாள் ஒருத்தி. முதல் வரியைப் படித்ததும்நமக்குள் காட்சி விரியத் தொடங்குகிறது. அவரவர் அனுபவம், கற்பனையைப் பொறுத்து இக்காட்சி விரிகிறது.(உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ர் வயலில் உழுது கொண்டிருப்பார். லதா அவருக்கு கஞ்சி எடுத்துச் செல்வார்.கல்யாண வளையோசை கொண்டு பாடல் காட்சியான இது ஏனோ எனக்கு நினைவுக்கு வந்தது).

அவன் சாப்பிட்டு முடிந்ததும், உனக்காக ஈச்சம் பழங்களை பறித்து வைத்திருந்தேன் என்று அவளிடம் எடுத்துத்தருகிறான். அவள் ஊரிலிருந்து நடந்து செல்வது முதல் ஈச்சம் பழங்களைப் பெற்றுக்கொள்வது வரையிலான சிலமணி நேரங்களை இரண்டே வரிகளில் கடந்துவிடுகிறது இந்தக் கவிதை. இது நவீன கவிதையின் சிறப்புகளில்ஒன்று. ஆனால் அதோடு முடிந்துவிட்டால் அது கவிதையில்லை. கடைசிவரியில் யுகபாரதி ஒரு முரணானவிஷயத்தைக் கையாள்கிறார்.

வானம் பார்த்த பூமி அது என்கிறார். மழை பெய்தால் தான் விவசாயம். அவன் உழுது கொண்டிருக்கிறான் என்றால்அது முந்தின நாள் பெய்த மழையால் ஏற்பட்ட நம்பிக்கை. அல்லது விரைவில் பெய்யும், விதைத்துவிடலாம் என்றநம்பிக்கை. இந்த நம்பிக்கை பெரும்பாலும் பொய்த்து விடுகிறது. எனினும் மழை பெய்யாத அந்த பூமியில்வேறொரு மழை பெய்கிறது. அது தான் பிரியமென்னும் மழை. அன்பென்னும் மழை. நேசமென்னும் மழை. அதுகுறையாமல் பெய்துகொண்டிருப்பதால் தான் வானம் பார்த்த பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வில் இன்னமும்ஈரம் எஞ்சியிருக்கிறது.

மனப்பத்தாயம் என்ற கவிதைத்தொகுப்பை 98ல் வெளியிட்டபோது யுகபாரதிக்கு வயது 22. கணையாழியில் பத்துஆண்டுகளுக்கும் மேலாக உதவி ஆசிரியராக இருப்பவர். ஒரு நல்ல கவிஞரை சினிமா எப்படி விழுங்கிச் செரித்துஏப்பம் விட்டு விடுகிறது என்பதற்கு நல்ல உதாரணமாக நா.முத்துக்குமார் வரிசையில் இப்போது யுகபாரதியும்சேர்ந்துள்ளார் மன்மத ராசா பாடல் மூலமாக. இரண்டு கவிதைத் தொகுப்புகள், கணையாழியில் உதவி ஆசிரியர்பணி ஆகியவற்றைவிட மன்மத ராசா பாடல் அவருக்குப் புகழ் தேடித் தந்துள்ளது. இது தான் இன்றைய நிலை.

- எஸ்.பாபு([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X