சுவீடன் நாட்டு வாழ்வுரிமை விருது பெறும் நாகை தம்பதி
நாகப்பட்டினம்: காந்திய கொள்கைகளுக்காகவும், நிலமற்ற தலித்துகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காகவும், நாகப்பட்டினத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜகன்னாதன் தம்பதியினர் மாற்று நோபல் பரிசு என அழைக்கப்படும், சுவீடன் நாட்டின் வாழ்வுரிமை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக சுவீடன், வாழ்வுரிமை விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் - சங்கரலிங்கம் ஜகன்னாதன் தம்பதியினர் உள்பட 4 பேர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும் பாடுபட்டதற்காக இந்த தம்பதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏழை தலித் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள், 1950ம் ஆண்டு சங்கரலிங்கம் ஜகன்னாதனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நிலமில்லாதவர்களுக்கு சேவை செய்யும் தனது பயணத்தை தொடங்கினார்.
12,000க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் மானிய விலையில் தலா ஒரு ஏக்கர் நிலம் பெறுவதற்கு இவர் உதவிகளை செய்திருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தூர் கிராமத்தில் 1981ஆம் ஆண்டு விவசாயிகளின் (பாட்டாளிகள்) விடுதலைக்கான நிலம் என்ற இயக்கத்தை கிருஷ்ணம்மாள் தொடங்கினார். இவரது கணவரும், சர்வோதய தலைவருமான ஜகன்னாதன், காலம் சென்ற வினோபாஜியின் பூமிதான இயக்கத்தில் தீவிரமாக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தம்பதியினருக்கு வழங்கப்பட உள்ள வாழ்வுரிமை விருது மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும்.
விருது குறித்து கிருஷ்ணம்மாள் கூறுகையில், குடிசைகளில் வாழக்கூடிய அனைவருக்கும் நல்ல வீடுகளை அமைத்துத்தர விரும்புகிறேன். எங்களுடைய கடின உழைப்புக்கு இந்த விருது ஒரு வெகுமதி என்றார்.
சில நாட்களுக்கு முன்புதான் சியாட்டில் பல்கலைக்கழகம் அளிக்கும் ஓபஸ் விருதுக்கும் கிருஷ்ணம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications