93 வயது தியாகிக்கு பென்ஷன்: கோர்ட் உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 93 வயது சுதந்திர போராட்ட தியாகி காளிமுத்து சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
நான் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. 1942 -ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டேன். அன்றைய ஆங்கிலேய அரசு என் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதனால் நான் ஓராண்டு பாதாள கிடங்குகளில் தங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளேன். தற்போது எனக்கு வாழ்வு ஆதாரம் எதுவும் இல்லை. இதனால் பென்ஷன் கேட்டு அரசுக்கு கடந்த 1989 ம் ஆண்டில் விண்ணப்பித்தேன். இதனை ஏற்று 1994 ம் ஆண்டு பென்ஷன் வழங்க அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து மத்திய அரசு வழங்கும் சுதந்திர சேனிக் பென்ஷன் வழங்க கோரி விண்ணப்பித்தேன். இது குறித்து ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அந்த பென்ஷன் வழங்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதை மத்திய உள்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால் அந்த ஆவணங்களில் உரிய சான்றுகள் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. இதனால் மீண்டும் உரிய விண்ணப்பங்களை இணைத்து விண்ணப்பித்தேன். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அதை ஏற்காமல் நிராகரித்து விட்டது.
எனக்கு தற்போது 93 வயது ஆகின்றது. இதனால் எனக்கு சுதந்திர சேனிக் சன்மானம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி தனது உத்தரவில் மனுதாரின் மனுவை பரிசீலனை செய்து அவருக்கு உரிய பென்ஷன் வழங்குமாறு மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications