காந்தி பொருட்கள்-அரசே ஏலம் எடுக்க முடிவு!

அமெரிக்கரான ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் தன்னிடம் இருந்த மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்தி மூக்குக் கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், ஒரு தட்டு, ஒரு கிண்ணம் ஆகியவற்றை ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்தப் பொருட்கள் நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்டிகோரம் என்ற ஏல நிறுவனத்தில் இன்று ஏலம் விடப்படவுள்ளது.
இதையடுத்து இந்தப் பொருட்களை மீட்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஓடிஸிடம் இந்திய துணைத் தூதர் பேசிப் பார்த்தார். ஆனால் அவரோ, இந்தியாவில் உள்ள ஏழைகளுக்காக மத்திய அரசு 5 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. அவருடன் பேசவும் முடியாது என அறிவித்து விட்டது.
மேலும் ஆன்டிகோரம் நிறுவனத்தை அணுகி, ஏலத்தை நிறுத்துமாறும் கோரியது. ஆனால் அந்த நிறுவனமோ தங்களால் ஏலத்தை நிறுத்த முடியாது என கூறி விட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி ஏலம் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அமெரிக்க வாழ் இந்தியரான பிரபல ஹோட்டல் அதிபர் சந்த் சிங் சத்வால் என்பவர் ஏலத்தில் கலந்து கொண்டு காந்தியடிகளின் நினைவுப் பொருட்களை ஏலம் எடுக்கவுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் அம்பிகா சோனி கருத்து தெரிவிக்கையில், மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை கொண்டு வர அரசு உறுதியுடன் உள்ளது.
ஏலம் நடத்தப்படாமல் இவற்றை கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. தேவைப்பட்டால், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தால் அரசே ஏலத்தில் கலந்து கொண்டு இவற்றைக் கொண்டு வரலாம் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இதன் மூலம் எப்பாடுபட்டாவது மகாத்மா பயன்படுத்திய பொருட்கள் மீட்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஒரு வேளை அரசே ஏலம் கேட்க முடிவு செய்தால், இந்தியத் தூதரக அதிகாரிகள் ஏலத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications