கொட்டுது அருவி-சுற்றுலா பயணிகளால் களைகட்டுது குற்றாலம்

குற்றால சீசன் கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய நிலையில் ஒரிரு தினங்கள் மட்டுமே அருவிகளில் நீர்வரத்து இருந்தது. பின்னர் அதுவும் நின்று போனது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் நெல்லை மாவட்டம் மழை விடாமல் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது குளிர்ந்த காற்று மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த சாரலால் மீண்டும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று காலை மெயின் அருவியில் தண்ணீர் வளையத்தை தாண்டி கொட்டியது.
ஐந்தருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி அருவி, புலியருவியிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. கடந்த சில நாட்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த சீசன் களைகட்டியிருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாபநாசத்தில் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை...
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம், பாணதீர்த்த அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இடையிடையே வெள்ளநீர் குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் சில நேரங்களில் மட்டுமே பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பாபநாசம் அணையில் தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் அடையாமல் படகுசவாரி செய்து உற்சாகமடைகின்றனர்.












Click it and Unblock the Notifications