குற்றாலத்துக்கு 'குட்பை'-பாலருவிக்கு படை!!
தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த மே 27ம் தேதி முதல் கேரளாவிலும், அம்மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
ஆனால், தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இதனால் குற்றாலம் வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ஒரு நாள் தண்ணீர் விழுகிறது என்பதை பார்த்து அவர்கள் சென்றால் மறுநாள் வெறும் பாறையை மட்டும் தான் பார்க்க முடிகிறது.
கேரளாவில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால் தென்மழை, கும்பாஉருட்டி அருவி, பாலருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றால சாரலையும், குளுகுளு சீசனையும் அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் வேறு வழியில்லாமல் அருகில் உள்ள பாலருவி, தென்மலை, கும்பாஉருட்டி ஆகிய அருவிகளுக்கு ஆட்டோ, வேன் மூலம் படையெடுத்து செல்கின்றனர்.
குற்றால சீசனை நம்பி பல லட்சம் முதலீடு செய்து கடை எடுத்த வெளிமாவட்ட வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் வியாபாரம் கெட்டு போய் விட்டதை நினைத்தும், வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கட்ட முடியாத நிலையிலும் கண்ணீர் வடிக்கின்றனர்.
மூங்கில்களை அழித்ததால் மழை பெய்யவில்லை...
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பொய்த்து போனதற்கு காரணம் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்,
குற்றாலம், செங்கோட்டை, புளியரை, குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி உள்ளிட்ட வனப்பகுதியில் மழையை ஈர்க்கும் ஈத்தல் எனப்படும் மூங்கில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் வெட்டி கடத்தப்படுகிறது.
மேலும் மேற்கண்ட வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டு தீயின் காரணமாக பல நூறு ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமாகியது. இந்த வனப்பகுதியை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. அதனால் மழை மேகங்கள் திரண்டு வந்தாலும் கலைந்து விடுகின்றன.
அடர்த்தியான வனப்பகுதியாக கேரள இருப்பதால் அங்கு தென்மேற்கு பருவ மழை அதிகம் பெய்கிறது. குற்றாலம் முதல் சிவகிரி வரையிலுள்ள வனப்பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மரம், மூங்கில், ஈத்தல் கடத்தலை தடுத்தால் மட்டுமே இனி இப்பகுதி வளம் மிக்கதாகும்.
அதுவரை எவ்வளவு கருமேகங்கள் திரண்டு வந்தாலும் பெயரளவிலேயே மழை பெய்யும் அபாயம் உள்ளது என்றனர்.













Click it and Unblock the Notifications