திராவிட மொழியியல் நிறுவனத் தலைவராக ம. ராசேந்திரன்

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பொறுப்பு வகி்க்கும் ராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திராவிட மொழியியல் நிறுவனத்தை, தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் மறைந்த வ.அய். சுப்பிரமணியம் தொடங்கி, அதன் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த 40 ஆண்டுகளாக திராவிட மொழிகள், பண்பாடு, பொருளாதார நிலைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 37 ஆண்டுகளாக சர்வதேச திராவிட மொழியியல் ஆய்விதழை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் திராவிட மொழியியல் குறித்த மாநாட்டையும் நடத்தி வருகிறது.
இந் நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த மாதம் 17ம் தேதி (வ.அய். சுப்பிரமணியம் இறப்பதற்கு முன்) நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவராக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இரு ஆண்டுகள் இந்தப் பதவியை வகிப்பார். மேலும், இந்திய திராவிட மொழியியல் சங்கத்தின் தலைவராகவும், ஆய்விதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் அவர் செயல்படுவார்.
தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் விருப்பப்படி அவரது அஸ்தி பெறப்பட்டு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்படும்.
மேலும், அவரது பெயரில் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளையும் தொடங்க ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் உண்டியல் வைத்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் பெறத் திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள், பணியாளர்கள் சார்பில் அவர்களது ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைக்கும் என்று கூறியுள்ளார் ராமசாமி.












Click it and Unblock the Notifications