உயர் கல்விக்கு 15 மத்திய பல்கலைக் கழகம் - பிரணாப்
வேலூர்: நாட்டின் உயர் கல்வி மேம்பாட்டுக்காக 15 புதிய மத்திய பல்கலைக் கழகங்களைத் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகம் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்த விழாவில் பல்கலை வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு, ருவாண்டா கயாம்ப நயம்வஷா, ருவாண்டா கல்வி அமைச்சர் சார்லஸ் மிரகண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி-யின் உரையை வாசித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
வி.ஐ.டி. பல்கலைக் கழகம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் 180 மாணவர்களுடன் துவங்கியது. ஆனால், தற்போது இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் பயிலக் கூடிய பல்கலைக்கழகமாக உயர்ந்துள்ளது.
வேந்தர் விசுவநாதனுடன் பார்லிமென்ட் நாட்களிலேயே பழகும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது அவர், உயர் கல்வி வழங்குவது மற்றும் கிராமப்புறங்களை மேம்படுத்துவதை தனது குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.
வி.ஐ.டி. உயர்கல்வி வழங்குவதில் சிறந்து வருகிறது. வல்லரசான அமெரிக்கா, சீனாவில் இருந்து ஆண்டுக்கு 25 லட்சம் பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் வெறும் 10 சதவீதம் தான்.
எனவே, நாட்டின் உயர் கல்வியை அதிகரிக்க வேண்டிய புதிய திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக 15 புதிய மத்திய பல்கலைக் கழகங்களைத் துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் ஆறு புதிய ஐ.ஐ.டி- க்களைத் துவங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications