சாதிப் பிரச்சனைகளை தடுக்க சர்வகட்சிக் குழு- நல்லக்கண்ணு யோசனை
ஸ்ரீவில்லிபுத்தூர்: சாதி பிரச்னை ஏற்படாமல் இருக்க பதட்டம் நிறைந்த ஊராட்சிகளில் சர்வகட்சி சார்பில் அனைத்து சமூகங்களை கொண்ட நிரந்தர குழுவை ஏற்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத்தை துவக்கி வைத்து தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு பேசுகையில்,
'ஸ்ரீவில்லிபுத்தூர் ,வத்திராயிருப்பு பகுதி மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பதட்டம் நிறைந்த ஊராட்சிகளில் சர்வகட்சி, அனைத்து சமூகங்களை கொண்ட குழுவை நிரந்தரமாக அமைத்திட வேண்டும்.
மேலும், பள்ளிகளில் மாணவர்களிடையே நடக்கும் சிறு சிறு பிரச்னைகளை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களை நடத்தி தீர்த்து கொள்ள வேண்டும். அந்த பிரச்னைகள் சாதி பிரச்னைகளாக மாறாமல் கல்வித்துறையினரும், காவல்துறையினரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் சாதி பிரச்னைகளால் இப்பகுதிகளில் கலவரம் ஏற்பட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி போராட வேண்டியது வரும்' என்றார்.












Click it and Unblock the Notifications