நேபாள முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா பெயர் நோபலுக்குப் பரிந்துரைக்க முடிவு

கொய்ராலா, நேபாள காங்கிரஸ் கட்சியின் பழம்பெரும் தலைவரும் ஆவார். அவரது பெயரை அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
நேபாளத்தில் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் சமூகமாக முடிந்து, அங்கு மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர கொய்ராலா ஆற்றிய பணிகளைப் பாராட்டி இந்த முடிவை எடுத்துள்ளது நேபாள அரசு.
இதுகுறித்த முடிவு பிரதமர் மாதவ் குமார் நேபாள் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக செய்தித்துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான சங்கர் பொக்ரியால் தெரிவித்தார்.
86 வயதாகும் கொய்ராலா பிரதமராக இருந்தபோதுதான் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் தங்களது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியலுக்குத் திரும்பினர். மேலும், நேபாள நாட்டில் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தது.
நேபாள பிரதமராக ஆறு முறை பதவி வகித்தவர் கொய்ராலா. நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாவுடன், அமைதி உடன்படிக்கையில் கொய்ராலா கையெழுத்திட்டது நேபாள நாட்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும், மன்னர் ஞானேந்திராவுக்கு எதிராக 19 நாட்கள் அமைதிப் போராட்டத்தையும் தலைமையேற்று நடத்தியவர் கொய்ராலா. இதன் மூலம் மன்னராட்சிக்கும் முடிவு கட்டிய பெருமை கொய்ராலாவுக்கு உண்டு.












Click it and Unblock the Notifications