ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என மாற்றம்
சென்னை: ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம் இனி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம்'' எனவும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் இனி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் எனவும் குறிப்பிடப்படும்.
ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் இனி, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் எனவும், மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர் இனி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எனவும் குறிப்பிடப்படுவார்கள் என்றும் முதல்வர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, முதல்வரின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையிடம் இருந்து மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான இனங்கள் தனியே பிரிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தலைமைச் செயலகத்தில், இந்த தனித்துறையை உருவாக்கவும், தனியாக ஒரு செயலாளரை நியமிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.ஜவகர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications