கருணாநிதி பேத்தி எழிலரசி கட்டிய அன்னதானக் கூடம் -தயாளு அம்மாள் திறந்து வைத்தார்
சென்னை : முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மகள் எழிலரசி கட்டியுள்ள அன்னதானக் கூடத்தை அவரது பாட்டியான, முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திறந்து வைத்தார்.
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மைலாப்பூர் முண்டக கண்ணி அம்மன் கோவிலில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. கோவில் பிரகாரத்திலேயே அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடம் அசுத்தமாகியது.
இதைத் தொடர்ந்து அங்கு பெரிய அளவிலான அன்னதானக் கூடத்தைக் கட்டித் தர எழிலரசி குடும்பத்தினர் முடிவெடுத்தனர். இதையடுத்து கரந்தை கப்பல் முருகேசன் செட்டியார்-ஜானகி அம்மாள் நினைவாக எழிலரசி- டாக்டர் ஜோதிமணி தம்பதியினர் ரூ.13 லட்சம் செலவில் பிரமாண்டமான அன்னதான கூடம் கட்டி உள்ளனர்.
அன்னதான கூட திறப்பு விழா இன்று காலை நடந்தது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரிப்பன் வெட்டி திறந்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், செல்வி, மு.க.அழகிரி மகள் கயல்விழி, காவேரி கலாநிதி மாறன், பிரியா தயாநிதி மாறன், அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் 360 கோவில்களில் தினசரி அன்னதானம் நடக்கிறது. முண்டக கண்ணி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ள இந்த இடம் சமீபத்தில் வழக்கில் இருந்து மீட்கப்பட்டது.
எழிலரசி-ஜோதிமணி குடும்பத்தினர் ரூ.13 லட்சம் செலவில் இந்த அன்னதான கூடத்தை கட்டி கொடுத்துள்ளனர்.
தமிழக கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளுக்காக மத்திய நிதிக்குழு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த தொகை கோவில் திருப்பணிக்களுக்காக செலவிடப்படுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications
