திடீரென தீப்பிடிக்கும் வீடுகள்-தீப்பிடித்த சிறுமிகளின் உடையில் கெரசின் ஊற்றப்பட்டது அம்பலம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகள் மர்மமான முறையில் திடீர், திடீரென தீப்பிடிக்கும் சம்பவத்தில் புதிய திருப்பமாக, தீப்பற்றிக் கொண்ட 2 சிறுமிகளின் உடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருப்பது தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த ஊரைச் சேர்ந்த 3 இளைஞர்களைப் போலீஸார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடிமோழியனூர் காலனி உள்ளது. அங்குள்ள வீடுகள் மர்மமான முறையில் திடீர், திடீரென தீப்பிடித்து எரிகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 64 தடவை இது மாதிரியான தீ விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் எப்பொழுது யார் வீட்டில் தீப்பிடிக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் 2 ஆடுகளின் உடல்களில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஆடுகள் காயமடைந்தன.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ராஜகோபால் வீட்டில் டி. வி. பார்த்துக்கொண்டிருந்த அவரது மகள் கற்பகம் (16), உறவினர் மகள் ரேகா (15) ஆகியோரின் உடைகள் திடீரென தீப்பிடித்தது. இதனால் அவர்கள் இருவரும் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கற்பகத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு கிடைத்த முக்கிய பொருட்களை மைலாப்பூரில உள்ள தடயவியல் அலுவலகத்திறகு அனுப்பிவைத்தனர்.
அந்த பகுதியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அங்கு முகாமிட்டுள்ளது.
3 இளைஞர்களிடம் விசாரணை
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பகலவன் கூறுகையில், தீவிர விசாரணை நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் 24 மணி நேரமும் தீயணைப்பு வண்டிகள் நிறுத்ப்பட்டுள்ளன. அதன் பின்னர் தற்போது தீப்பிடிக்கும் சம்பவம் நடைபெறவில்லை.
இரு சிறுமிகளின் உடையை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விரைவில் உண்மை தெரியும். எனவே பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications