Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மின் அகரமுதலிகள்

Subscribe to Oneindia Tamil

MU.Elangovan with Girikoris
- முனைவர் மு. இளங்கோவன்

தமிழில் அச்சுவடிவில் அகரமுதலிகள் இருப்பனபோன்றே வளர்ந்துநிற்கும் கணிப்பொறி, இணையத்துணையுடன் மின்வடிவிலும் உள்ளன.ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி அகரமுதலிகளைப்போல் நம் மின்அகரமுதலிகள் வளர்ந்தவடிவில் இல்லை. வளர்முக நிலையிலேயே உள்ளன.தமிழ் மின் அகரமுதலிகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி மின்னகரமுதலியாக உள்ளது. அதுபோல் தமிழ்விக்கிப்பீடியாவின் அகரமுதலியும் மின்வடிவில் உள்ளது.

பால்சு அகரமுதலியும் (தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில்), தமிழ் -செர்மனி -ஆங்கில அகரமுதலியும்,ஆங்கிலம்-தமிழ்-சிங்கள அகரமுதலியும்; வின்சுலோவின் ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியும்,கிரியாவின் தற்கால அகரமுதலியும் இன்ன பிற அகரமுதலிகளும் மின்வடிவில் எந்த அளவில் வளப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இன்னும் மேம்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.

தமிழ் விக்கிப்பீடியா அகரமுதலி ஒரு பன்மொழி அகராதியாக, மிகச்சிறப்பாக இலவசமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும் அதில் தமிழ் அறிஞர்கள் இலக்கணப் புலவர்கள் பங்கெடுக்காமல் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதனை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

தமிழ் அகரமுதலிகளில் ஒலிப்புமுறைகள் இடம்பெற வேண்டியதன் தேவை,படங்கள், வரைபடங்கள், ஓவியங்கள், ஒலிக்கோப்புகள் இணைப்பு பற்றியெல்லாம் இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது, இதுவரை மின் அகரமுதலிகளில் இடம்பெற்றுள்ள சொற்களின் வகைப்பாடு, தேவை,நோக்கம், அகரமுதலிகளை வெளியிட்ட நிறுவனங்களின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து எதிர்காலம் மின்னகரமுதலிகளை எதிர்நோக்கியுள்ளதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

தென்னாசிய மின் நூலகம் ( Digital South Asia Library ) (http://dsal.uchicago.edu/about.html )

தென்னாசிய மின் நூலகத் தளத்தில் தென்னாசியாவில் வழங்கும் பலமொழிகளுக்கும் உரிய மின் அகரமுதலிகள் ஆய்வாளர்கள்,ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளன. அவ்வகையில் அசாமி,பலுசி, பெங்காளி,ஆங்கிலம்,குசராத்தி,இந்தி,காசுமீரி,மலையாளம்,மராத்தி,நேபாளி, ஒரியா, பாலி, பஞ்சாபி,பெர்சியன், இராசத்தானி,சமற்கிருதம்,சிந்தி,தமிழ் தெலுங்கு, உருது மொழி அகரமுதலிகளும்,பர்ரோ,எமனோவின் திராவிட வேர்ச்சொல்லகரமுதலியும்( Dravidian etymological dictionary ) குறிப்பிடத்தக்கன.

தமிழ்மொழி அகரமுதலிகள்

தென்னாசிய மின் நூலகத் தளத்தில் தமிழ்மொழிப் பகுதியில் பெப்ரியசு அகரமுதலி(Fabricius's Tamil and English dictionary),கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, ஆல்பின் அகரமுதலி,சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி,வின்சுலோ அகரமுதலிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அகரமுதலிகளையும் வாங்கிப் பாதுகாத்தல், பயன்படுத்தலில் அச்சுவடிவு எனில் கையாளத்தொல்லையாக இருக்கும். ஆனால் மின்னகரமுதலியாக இருப்பதால் சொற்பொருள் வேறுபாடு அறியவும், ஆய்வுக்குக் கூடுதல் தகவல் பெறவும் வாய்ப்பாக உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி(Tamil lexicon.University of Madras, 1924-1936) http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

தமிழ் அகரமுதலிகளில் சென்னைப் பலைகலைக்கழகப் பேரகரமுதலிக்குத் தனியிடம் உண்டு.தமிழில் அறிவியல் அடிப்படையில் பல அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட இவ்வகரமுதலியில் தமிழல்லாத பிறமொழிச்சொற்களைத் தமிழாகக் காட்டப்பட்டுள்ளமையை அறிஞர்கள் சிலர் எடுத்துக்காட்டி விளக்குவது உண்டு.திருத்தப்பட்ட பதிப்பு வெளிவர உள்ள, இந்த அகரமுதலியின் முன்னைப் பதிப்பாசிரியராக விளங்கிய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தலைமையில் இயங்கிய குழுவினர் இந்த அகரமுதலியை மிக நுட்பமுடன் உருவாக்கியுள்ளனர். தமிழ் மின் அகரமுதலிகளுள் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. தமிழ்ச்சொல் அதனை அடுத்து, அதற்குரிய ஆங்கிலச்சொல்,ஆங்கில விளக்கம்,இலக்கணக்குறிப்பு, மேற்கோள், மேற்கோள் நூல் குறிப்பு, தொடர்புடையச்சொற்கள் என அச்சு வடிவில் உள்ள விளக்கங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும் வசதிகள் பயன்படுத்துவோருக்குப் பல வகையாகத் துணைபுரிகின்றன. முன் பக்கம் பின் பக்கம் பார்ப்பதுபோலவே முன் சொல்,பின் சொல் பார்க்கும் வசதியும் உள்ளது.

பெப்ரியசு உருவாக்கிய பெப்ரியசு அகரமுதலி (Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

பெப்ரியசு அகரமுதலி நான்காம் பதிப்பு(1972) மின்னகரமுதலியாக உள்ளது.இது தமிழ்,ஆங்கில அகரமுதலியாகும்.

ஒருங்குகுறி வடிவில் தமிழ் எழுத்துகள் உள்ளதால் எழுத்துரு சிக்கல் இல்லை. அகரவரிசைப்படி சொற்கள் உள்ளன.

தமிழில் தட்டச்சிட்டும்,ஆங்கிலத்தில் தட்டச்சிட்டும் தேடலாம்.சான்றாக mother என்ற ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சிட்டால் அதனுடன் தொடர்புடைய பல தமிழ்ச் சொற்களை அதன் பொருள்களை நாம் அறியலாம்.தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் இருந்து நமக்குப் பேருதவிபுரிகிறது.

பெப்ரியசு அகரமுதலியில் தேடு சொல்லாக யாப்பு என்பதைத் தட்டச்சிட்டால் யாப்பு தொடர்பான பக்கம் நமக்கு விரியும்.இதில் முழு விளக்கமும் வேண்டாம். குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள் மட்டும் போதும் என்றால் அதற்குரிய பெட்டியில் சரி குறியைத் தேர்ந்து உரிய யாப்பு என்ற சொல்லுக்குரிய பொருளை மட்டும் அறியலாம். இதுபோல் குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள் மட்டும் அறிந்தால் போதும் என்றால் அந்தப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்குரிய தேர்வுச் சொற்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பாக யாப்பு என்று சொல்லுக்குரிய முடிவாக ஒரு முடிவு இருக்கும். அதன் அருகில் உள்ள p.832 என்ற பகுதியை அழுத்தினால் பெப்ரிசியசு அகரமுதலியின் 832 ஆம் பக்கத்துக்குரிய பகுதியை முழுமையாகப் பார்வையிடலாம். யாப்பு என்ற தனிச்சொல்லுக்கு மட்டும் விளக்கம் வேண்டினால்,

"யாப்பு (p. 832) [ yāppu ] , s. (யா v.) a bandage, a tie, கட்டு; 2. poetry, செய்யுள்; 3. prosody, செய்யு ளிலக்கணம்.
யாப்பதிகாரம், யாப்பிலக்கணம், prosody.
யாப்பருங்கலம், a treatise on prosody." என்று விளக்கம் காணப்படும்.

ஒரு பக்கத்தைப் பார்வையிடும்பொழுது முன் பக்கம் பின் பக்கம் பார்க்கும் வசதியும் உண்டு. ஒருங்குகுறியில் இருக்கும் விளக்கத்தை asci i குறியீட்டு எழுத்திலும் படிக்க இயலும்.

கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி (N. Kathiraiver Pillai's Tamil Moli Akarathi: Tamil-Tamil dictionary) http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/

கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி அனைவராலும் விரும்பபப்படும் அகரமுதலியாகும். ஆறாம் பதிப்பாக வெளிவந்த(1922) அகரமுதலி மின்னகரமுதலியாக உருவாகியுள்ளது. இது தமிழ்-தமிழ் அகரமுதலியாகும். இதில் "அ" என்ற ஒற்றை எழுத்தை அழுத்தித் தேடும்பொழுது 5479 தேடல்முடிவுகள் கிடைக்கின்றன.

" சிற்சில அகராதிகள் காலந்தோறும் அவவரால் வெளியிடப்பட்டன. அவைகளெல்லாம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களினும், வேதாந்த சித்தாந்த நூல்களினுமுள்ள அகப்பொருள் புறப்பொருட் பாகுபாடுகள், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகள், வெண்பா முதலிய பாவகை, பாவினம், அலங்காரவகை, பரதராக தாளப்பகுதி, அங்கக்கிரியை, உடலவருத்தனை, அவிநயம், நிலை, கூத்துவகற்பம், வங்கியமுதலிய கருவியிலக்கணம், பண், வண்ணப்பகுதி, வரிப்பகுதி, தத்துவம், முப்பொருளிலக்கணம் என்றின்னோரன்ன முக்கிய விடங்களாகிய சொற்பொருட்டொகைகளைக் கொள்ளாதனவாயிருந்தலை யுணர்ந்த சில நண்பர்கள் அவைகளெல்லாமமைய ஒரு அகராதியொன்று தருகவென்று பன்னாளும் பன்முறையுந் தூண்ட அதற்கிசைந்து யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்வான் நா ...கதிரைவேற்பிள்ளை அவர்களைக்கொண்டு பரதசேனாபதீயம், இசை நுணுக்கம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,குண்டலகேசி, அன்பினைந்திணை, கல்லாடம், தொல்காப்பியம், அகநானூறு,புறநானூறு, கலித்தொகை பத்துப்பாட்டு, இலக்கண விளக்கம், வீரசோழியம்,புராணங்கள், இதிகாசங்கள், சூளாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, சித்தாந்த சாத்திரம், பிங்கலந்தை, திவாகரம் முதலிய அரியபெரிய நூல்களினின்றுஞ் சொற்களையும் தொகைப்பொருள்களையும் செந்தமிழ்நாட்டு வழக்கமொழிகள் பலவற்றையுஞ் சேர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன்." என்னும் நூலின் முகவுரைப் பகுதிகளைக் கற்கும்பொழுது கதிரைவேல் பிள்ளை அவர்களின் அகராதிச் சிறப்பு நமக்குப் புலப்படும்.

டேவிட் எம்.சி.ஆல்பின் அடிப்படைத் தமிழ்ச்சொற்களின் அகரமுதலி (A core vocabulary for Tamil) http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/

டேவிட் எம்.சி.ஆல்பின் அகரமுதலி பென்சில்வேனியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது( 1981) இந்த அகரமுதலியில் அ என்ற எழுத்தைத் தட்டச்சிடும்பொழுது 99 தேர்வுமுடிவுகளைக் காட்டுகின்றது.சந்தி என்ற ஒரு சொல்லைத் தட்டச்சிடும்பொழுது மூன்று தேர்வு முடிவுகள் கிடைக்கின்றன. அதில் சந்தி,சந்தி,சந்திரன் என்னும் சொற் தலைப்புகள் காட்டப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளன.

சந்திரன் (p. 30) [ cantiraṉ ] cantiran, nelaa சந்திரன், நெலா moon
என்று பேச்சு வழக்கில் விளக்கம் தரப்பட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது. தமிழில் வழங்கும் அடிப்படையான சொற்களுக்கு விளக்கம் தரும் இந்த அகரமுதலியில் பேச்சு வழக்கில் அமைந்த விளக்கம் தனித்துச் சுட்டத்தக்கது.
பஸ் [ pas ] bassu, kaaru பஸ்ஸு, காரு bus

என்று வரும் விளக்கம் தமிழில் இன்று கலந்து பேசப்படும் பிறமொழிச் சொற்களையும் தமிழாகக் காட்டும் போக்குக்குச் சான்றாகும்.

அகராதி [ akarāti ] DikSanari டிக்ஷனரி dictionary

என்று வரும் விளக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது.

கணவன் [ kanavan ] viiTTukkaararu வீட்டுக்காரரு husband; (householder) landlord

என்னும் விளக்கம் பேச்சு வழக்கில் உள்ள சொற்களுக்குப் பேச்சு வழக்கில் விளக்கம் தரும் ஒன்றாக உள்ளது. பேச்சு வழக்கில் உள்ள டம்பளர், லோட்டா, சார் என்ற பிறமொழிச்சொற்களையெல்லாம் தமிழ்ச்சொல்லாகக் காட்டும் வழக்கம் இந்த அகரமுதலியில் உள்ளது. தமிழில் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கு வழக்குச்சொல்லால் விளக்கம் வரையப்பட்டுள்ளது.

பேராசிரியர் என்ற சொல்லை நோக்கும் பொழுது "பேராசிரியர் [ pērāciriyar ] prafasaru பரபசரு professor " என்று உள்ளது. பேச்சுத் தமிழுக்கு இந்த அகரமுதலியில் முதன்மையளிக்கப்பட்டுள்ளது. அறுபத்தெட்டுப் பக்கங்களில் அமைந்துள்ள இந்த அகரமுதலி தமிழாய்வில் ஈடுபடும் அயல்நாட்டாருக்கு மிகுதியும் பயன்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+