துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தமிழரங்கம் - 2010

பிப்ரவரி 12, வெள்ளிக்கிழமை அன்று சேக் ராஷீத் ஆடிட்டோரியத்தில் விழா நடைபெற்றது. இதில், கவிஞர் கனிமொழி எம்.பி., தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இ.டி.எ. அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குனர் சையது சலாகுதீன், நடிகர் பசுபதி, சாக்கோட்டை அன்பழகன், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கெளரவத் தலைவர் அஜ்மன் மூர்த்தி மற்றும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தொடக்கத்தில் செல்வி நிவேதிதாவின் தமிழ்த்தாய் வாழ்த்தும், செல்வி பிரீத்திகாவின் அமீரகத்தின் தேசிய கீதமும் பாடப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகள் செல்வி ஸ்வேதா, செல்வி நிவேதிதா மற்றும் கோவையைச் சேர்ந்த புட் லூஸ் நடனக்குழுவினரின் நடனம் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சமாக தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம், அமீரக சிலம்பாட்டக் குழுவினரால் (நெல்லை ஜான்பாவா குழுவைச் சேர்ந்த வீரர்கள்) மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.
தொடர்ந்து அமைப்பின் வலைத்தளத்தினை (www.emitaa.com) கவிஞர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
பின்னர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசிய தலைவர் அமுதரசன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், வரும் ஆண்டினை கல்வி ஆண்டாக கருத்தில் கொண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க இருப்பதாக தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சாக்கோட்டை அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
பிறகு நடிகர் பசுபதி, அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஈ. டி.எ. அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயயக்குனர் சையது சலாகுதீன் அவர்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் நல்வாழ்வுக்கு தமிழக அரசும் இந்திய அரசும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரிடமும், கனிமொழி எம்.பி.யிடமும் வேண்டுகோள் வைத்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நடத்தவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கான முன்னோட்டமாகவும் அம்மாநாடு வெற்றி பெறவும் இந்தக்கூட்டம் அமையும் என்று கூறியதோடு இ.டி.எ. நிறுவனத்தின் சேவையையும், இங்குள்ள தமிழர்களுக்கு அவர்கள் புரிந்துவரும் உதவிகள் தொடர்ந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மேலும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் பாராட்டினார்.
கவிஞர் கனிமொழி பேசுகையில்,ர் இது துபாயில் நடைபெறும் ஒரு கூட்டம் போலவே தெரியவில்லை. ஏதோ தமிழகத்தில் நடைபெறும் மாநாடு போல இருக்கிறது.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் தகுந்த உரிமைகள் கிடைத்திட பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றப் பாடுபடுவேன் என சூளுரைத்தார்.
தொடர்ந்து அமைப்பின் பணிகள் தொடர வாழ்த்துக்களை கூறிய அவர், வரவிருக்கும் செம்மொழி மாநாட்டில் அமீரகத் தமிழர்கள் அமைப்பு கலந்து கொண்டு சிறப்பிக்கவும் கேட்டுக்கொண்டார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அமீரகத் தமிழர்களின் இலக்கான உழைப்போம் உயர்வோம், உதவுவோம் என்பதை பாராட்டி விளக்கிப் பேசினார். மேலும் தமிழர்களைப் போல, நம்முடைய மக்களைப் போல உழைத்தவர்கள் யாரும் கிடையாது. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பது மட்டுமல்ல. வள்ளுவருடைய குறளிலே தமிழ் பண்பாடு இருக்கும். மனித நேயம் இருக்கும். மொழி கடந்து, நாடு கடந்து, இனம் கடந்து, யாதும் ஊரே, யாவரும் கேளிர்! என்று எப்படி ஒரு பொது தத்துவமோ அதே போன்ற ஒரு தத்துவத்தைத்தான் மிக அழகாக எடுத்துச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.
மேலும் கலைஞர் அவர்களின் தமிழ்ப்பணியையும் அவர் காணவிருக்கின்ற உலகச் செம்மொழி மாநாடு பற்றியும் விரிவாகப் பேசினார்.
விழாவில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகளை சையது சலாஹுத்தீன் அவர்களுக்கு, வீரமணி அவர்களும், திருமதி அஜ்மான் மூர்த்தி அவர்களுக்கு கவிஞர் கனிமொழி அவர்களும், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் அவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், பதக்கங்கள் வழங்கி கெளரவித்தனர்.
விழாவில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் 8-வது ஆண்டு மலர் கவிஞர் கனிமொழி எம்.பி.யால் வெளியிடப்பட்டது தொடர்ந்து அமைப்பின் நிர்வாகிகளுக்கு கனிமொழி பொன்னாடை வழங்கி பாராட்டினார். கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அமைப்பின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து முகேஷ், பெல்லிராஜ் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியை இரவு 11.45 மணி வரை தொலைக்காட்சிப் புகழ் செல்வி ரம்யா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications