சோயப்பைக் காதலித்துக் கரம் பிடிக்கும் சானியா மிர்ஸா

ஹைதராபாத்தைச் சேர்ந்த சோரப் மிர்ஸாவுக்கும், சானியாவுக்கும்தான் முதலில் நிச்சயதார்த்தம் நடந்தது. சோரப் மிர்ஸாவின் குடும்பமும், சானியாவின் குடும்பமும் நீண்ட காலமாக பழகி வந்தவர்கள் ஆவர். இதன் அடிப்படையில்தான் சோரப்புக்கும், சானியாவுக்கும் மணம் முடிக்க தீர்மானித்தனர்.
ஆனால் இது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முறிந்து போனது. காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்குடன் காதல் வயப்பட்டுள்ளார் சானியா. துபாய்க்கு அடிக்கடி போனபோதுதான் சோயப்புடன் காதல் வயப்பட்டுள்ளார் சானியா. இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர்.
இப்போது தான் காதலித்து வந்த சோயப்பையே மணக்கவுள்ளார் சானியா. இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
இதுகுறித்து சானியா அளித்துள்ள ஒரு பேட்டியில்,
எனது அத்தையின் வீடு துபாயில் உள்ளது. இதனால் எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவரது வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். அப்போது துபாயில் நடைபெறும் எங்களது உறவினர்கள் இல்ல விழாக்களில் கலந்து கொள்வேன்.
இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும், துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வருவார். நானும், அவரும் பல்வேறு விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டோம். அப்போது இருவரும் நண்பர்களாக பழகினோம். இந்த நட்பு நாளாக நாளாக காதலாக மாறியது. அவரது எளிமை, அடக்கம், கிரிக்கெட் ஆட்டத்திறமை போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதையும் ஒளிவு- மறைவின்றி பேசுவார். எளிதில் கோபம் வராது.
டென்னிஸ் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளார். எனது ஆட்டத்தை பற்றி நிறைய விமர்சனம் செய்வார். இதெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு திறமையாளர் எனக்கு கணவராக கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். நான் பாகிஸ்தான் வீரரை மணந்தாலும் இந்தியா சார்பில்தான் டென்னிஸ் ஆடுவேன். நான் பிறந்த மண்ணை மறக்கமாட்டேன். திருமணத்திற்கு பிறகு இருவரும் துபாயில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார் சானியா.
2 வாரங்களுக்கு முன்பு சோயப் மாலிக் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் ஹைதராபாத்தில் உள்ள சானியா வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்டாராம். உடனடியாக சானியாவின் தந்தை இம்ரான் மிர்ஸாவும் சம்மதம் தெரிவிக்கவே தற்போது கல்யாணத்தை முடிவு செய்துள்ளனர்.
முதல் திருமண அறிவிப்பு பெரும் தோல்வியில் முடிந்ததால், சோயப் - சானியா திருமண நிச்சயதார்த்தத்தை எளிமையான முறையில் முடித்துள்ளனர்.
சோயப் மாலிக்கின் முதல் திருமண அறிவிப்பும் கூட தோல்வியில் முடிந்தது என்பது நினைவிருக்கலாம். சோயப்புக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட் கருத்து வேறுபாடு காரணமாக இது முறிந்து போனது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது, சோயப் ஏமாற்றி விட்டார் என்று ஆயிஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் சோயப்பும், சானியாவும் ஒன்று சேரவுள்ளனர். துபாயில் தங்கியுள்ள சோயப் எப்போதாவதுதான் பாகிஸ்தான் போவாராம். சமீபத்தில்தான் அணியின் ஒற்றுமையைக் குலைத்ததாக கூறி சோயப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒரு ஆண்டு தடை, ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications