இமயமலை பனிப்பாறை விவகாரம்: தவறை ஒப்புக் கொண்டா ஐபிசிசி தலைவர் பச்சோரி

ஆனால் இந்தத் தவறுக்காக தான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புவிவெப்பத்தின் தாக்கத்தால் இந்தியாவின் இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் 2035ம் ஆண்டுக்குள் காணாமல் போகும் என பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுகளின் கூட்டமைப்பு (ஐபிசிசி) அறிவித்திருந்தது.
ஆனால் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதை கடுமையாகவும், திட்டவட்டமாகவும் மறுத்தது.
ஆதாரமில்லாத பொய்யான தகவலை மிகைப்படுத்தி வெளியடக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்படும் அறிக்கையில் ஆதாரமற்ற தகவல்கள் வெளியாவது அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும், இதற்கு பொறுப்பேற்று அதன் தலைவர் பச்சோரி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவின் மறுப்புக்கு விரைவில் பதில் அளிப்போம் என ஐபிசிசி தலைவர் ஆர்.கே.பச்சோரி இருதினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று நிருபர்களை சந்தித்த பச்சோரி, 'இமயமலை பனிப்பாறைகள் உருகுவதாக ஐபிசிசி வெளிட்ட அறிக்கையில் தவறு நிகழ்ந்து விட்டது. மீண்டும் பிழை ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.
அதற்காக நான் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை. இயல்பாக ஏற்படக்கூடிய மனிதப் பிழைக்காக நான் பொறுப்பில் இருந்து விலக முடியாது.
எனினும் இதுபோன்ற பிழை நடந்தது துரதிர்ஷ்டவசமானது. ஐபிசிசி அமைப்பில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் சர்வதேச நாடுகளால் தேர்வு செய்யப்பட்ட நிபுணர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
இதனால், அமைப்பின் மீதான நம்பகத்தன்மை குறித்து மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பில்லை. எப்படியானாலும், பருவநிலை மாற்றம் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய அபாயம் என்பதில் சந்தேகமில்லை என்றார்.












Click it and Unblock the Notifications