குமாரகோவில் கொடிமரம் அடியில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
குமாரகோவில்: குமாரகோவிலில் புதிய கொடிமரத்தை நாட்டும் பணிகளுக்கு இடையே பழங்கால தங்கம், வெள்ளி, செப்பு பொருட்கள் கிடைத்தன. இவற்றின் மூலம் பழைய கொடிமரத்தின் வயது கண்டுபிடிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான கோயில். இங்கு குமரபருவத்தில் வேளிமலையில் தினை வளர்த்த வள்ளிதேவியை முருகன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
இக்கோயிலில் வள்ளிதேவியோடு முருகபெருமான் காட்சி தருகிறார். வேணாட்டு மன்னர்கள் ஆட்சியின் போது இங்கு கோயில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போதைய கொடிமரம் 90 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கொடிமரம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. உடனே புதிய கொடிமரம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 1991ல் பத்மனாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்த போது புதிய கொடிமரம் அமைப்பதற்கான மரத்தை வனத்துறையில் இருந்து எடுக்க அனுமதி வழங்கினார்.
இதன் பேரில் கொடிமரம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, கோயில் வளாகத்தில் வைத்திருந்தனர். கொடிமரம் அமைப்பதற்காக பக்தர்களிடம் இருந்து உதவியும் பெறப்பட்டிருந்தது. இருந்தும் கொடிமரம் அமைக்கப்படவில்லை. கொடிமரமும் பாதுகாப்பு இல்லாமல் வெயில், மழையில் காய்ந்து பயனற்ற நிலைக்கு வந்தது. இதனால் புதிய கொடிமரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதிய கொடிமரம் வாங்கி, எண்ணெயில் ஊறவைத்து, பக்குவப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோயில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் புதிய கொடிமரம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த பழைய கொடிமரத்தை அகற்றும் பணி ஒரு வாரமாக நடந்து வந்தது.
அப்போது கொடிமரத்தின் தரை பகுதியில் இருந்து 2,600 செம்பு நாணயங்கள், 14 கிராம் தங்கம், 535 கிராம் வெள்ளி மற்றும் பவளம் கண்டெடுக்கப்பட்டது. செம்பு நாணயங்களில் சங்கு முத்திரையும், ஆயிரத்து 95 கொல்லம் ஆண்டு முத்திரையும் உள்ளது.
இதன்படி பார்க்கும் போது கொடிமரம் அமைத்து 90 ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது. தற்போது கும்பாபிஷேக பணிகள் முடிந்து தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிய கொடிமரமானது ஏற்கனவே இருந்த கொடிமரத்தின் உயரத்துடன் செம்பு தகடுகளால் வேயப்பட்டு தங்கமுலாம் பூசப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, செம்பு பொருட்களோடு மேலும் பக்தர்களால் வழங்கும் பொருட்களை கொடி மரத்தின் உட்பகுதியில் வைக்கப்பட்டு விரைவில் புதிய கொடிகம்பம் அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications