பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி மறைவு: கருணாநிதி, வைகோ இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பியின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 79 வயதான பேராசிரியர் சிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்றிரவு மறைந்திருக்கிறார்.

பேராசிரியர் கா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூகவியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர்.

இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மனி என்று பல நாடுகளில் பணியாற்றி பெருமை சேர்த்தவர். 8-வது தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்றதற்கு பரிகாரமாக கடந்த 2000-ம் ஆண்டில் அவருக்கு திமுக அரசு திரு.வி.க. விருது வழங்கி கௌரவித்தது.

அன்மையில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரை ஆய்வரங்கக் குழுவிற்கு தலைவராக்கி திமுக அரசு அவரை சிறப்பித்தது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தனது உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் இலங்கையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து கோவைக்கு காரிலேயே வந்து சென்றார்.

மாநாடு முடிந்து செல்லும்முன்பு என் அறைக்கு வந்து எனது கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். 70-க்கும் மேற்பட்ட நூல்களையும், 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி உலக அறிஞர்களால் போற்றப்பட்டவர் அவர். அவரின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரை பிரிந்து வருந்தும் அவரது துணைவியார் ரூபாவதி சிவதம்பிக்கும், அவரது மகள்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறியிருந்தார்.

சிவதம்பி மறைவுக்கு வைகோ இரங்கல்:

ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிக்க துயரமும் அடைந்தேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தத்தின் மாணவராகிய சிவத்தம்பி, பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்புலத் தலைவராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

சிவத்தம்பி ஒரு சிறந்த விமர்சகர். மேலை நாட்டு விமர்சன முறையை தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியவர். தொல்காப்பியத்தைப் படித்து, தமிழ் இலக்கணத்தில் கரை கண்டவர். 'தொல்காப்பியத்தை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதி இருக்கிறார்கள்" என்ற கருத்தை முன்வைத்தவர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருள்சோதியில் கலந்தார் என்பதற்கு, வரலாற்று ரீதியாக பகுத்தறிவு விளக்கத்தைக் கொடுத்தவர். சிறந்த பொது உடைமைவாதி, பகுத்தறிவாளர்.

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில், உலக அமைப்பின் பொதுச் செயலாளராக, தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று கூறி தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இலங்கை சுதந்திராக் கட்சித் தவைர்களுடன் நெருக்கமாக இருந்த சிவத்தம்பி, நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணி ஆற்றினார்.

சிவத்தம்பியின் தந்தையார் கார்த்திகேசு, சைவப்புலவராகத் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இலங்கையின் வடமராட்சி பகுதி ஈன்ற சிறந்த புலமையாளர்களுள் ஒருவர் சிவத்தம்பி. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி தமிழ் இலக்கியவாதிகள் நிறைந்த பகுதி என்பதால், இலங்கை அரசு வடமராட்சி பகுதியைக் குறிவைத்துத் தாக்கியது. பிரபாகரனுக்கும், கவிஞர் காசி ஆனந்தனுக்கும் உறவினரான பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் கூறியிருந்தார்.

கார்த்திகேசு சிவத்தம்பி மறைவு தமிழுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

ஈழத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி மாரடைப்பால் காலமான செய்து கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

வீரம் விளையும் இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த சிவத்தம்பி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்த சிவத்தம்பி, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தில்லி சவர்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி தமிழ் வளர்த்தவர்.

இலங்கை தமிழ் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 70-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டவர்.

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் முன்னோடியாகவும், மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கார்த்திகேசு சிவத்தம்பி மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு: சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

இடதுசாரி சிந்தனையாளரும், முற்போக்கு தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய விமர்சகருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி(79) இலங்கை யாழ்ப்பாணத்தில் ஜூலை 6-ம் தேதி காலமானார். கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.

கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் மார்க்சிய நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டவர். தனது ஆய்வுக் கட்டுரைகளின் மூலமாக பழந்தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் உழைப்பாளி வர்க்கத்தின் பங்களிப்பை வெளிக் கொணர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனின் மாணவராவார். உலக அளவிலான தமிழியல் ஆய்வுகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியமும், தமிழ் சினிமாவும் பயணிப்பதற்கான முற்போக்கு திசைவழியை அமைத்துக் கொடுத்தவர். 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களும், 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் தமிழ் இலக்கியத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் அருங்கொடைகளாகும். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு தமிழ்நாடு அரசு திரு.வி.க.விருது வழங்கி கவுரவித்தது. சென்னைப்பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியராக சென்று வந்துள்ளார்.

அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது துணைவியார் மற்றும் குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+