ஆண்டாள் அருளிய திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்: மாதங்களில் சிறந்த மார்கழியில், மதி நிறைந்த நன்னாளில், கோவிந்தன் பெயரைச் சொல்லி, குளித்து நீராடுவோம் ஆயர்பாடி பெண்களே. நந்தகோபன் மாளிகையாகி விட்ட வடபத்ரசாயி பெருமாளுடைய கோவிலில், அந்தப் பெருமாள் நம் கண்களுக்கு கண்ணனாகவே காட்சி தருகிறான்.
நந்தகோபன் திருமகனாம், யசோதை பெற்ற இளஞ்சிங்கமாம், அந்த கார்மேனிக் கண்ணன், முழுமதியின் முகமுடையான் நாராயணனே என் கண்ணன். நம்மைப் போன்ற இளம் பெண்களின் விருப்பத்தை அந்த செங்கண் படைத்த கண்ணனே நிறைவேற்றுவான். அவனிடம் உங்களது கோரிக்கைகளை வையுங்கள். அந்தப் பார் புகழும் கார் வண்ணனின் புகழைப் பாடி உலகத்தோர் போற்றும் வண்ணம் இந்த மார்கழி நீராடுவோம்.


Click it and Unblock the Notifications
